ஜூன் 07 – என் தியானம்!
“உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்” (சங். 119:97).
பெரிய சக்கரவர்த்தியாய் இஸ்ரவேல் தேசத்தை அரசாண்ட தாவீது இராஜாவுக்கு எத்தனையோ ஆயிரம் பணிகள் இருந்திருக்கக்கூடும். சொல்லிமுடியாத பிரச்சனைகள் வாட்டியிருந்திருக்கக்கூடும். ஏராளமான எதிர்ப்புகளும் எதிரிகளும் இடைவிடாமல் பயமுறுத்தியிருந்திருக்கக்கூடும். அவற்றின் மத்தியிலும் அவர் “நாள் முழுவதும் வேதம் என் தியானம்” என்று உற்சாகத்தோடு சொல்லுகிறார்.
டின்டேல் என்ற பக்தன் தன் அநுபவத்தை எழுதும்போது, ‘என் வீடுகளில் ஜன்னல் திரைகள் மூடப்பட்ட வேளைகளில் எங்கள் முன்னோர்கள் வேதாகமத்தைக் கண்ணீரோடு வாசிப்பார்கள். கண்ணீர்த்துளிகள் அந்த வார்த்தையை மறைத்தபோதும் ஆத்துமாவின் தரிசனத்திற்கு அது உயிரூட்டினது. வியாபாரம் நசிந்துவிட்டபோதும், தொழில் துவண்டுவிட்டபோதும், எங்கும் இருளாய் நம்பிக்கையற்றுப்போனபோதும் என் பிதாக்களின் ஒரே நம்பிக்கை வேதபுத்தகமே.
அதே நேரம் மகிழ்ச்சியிலும், ஆனந்தக்களிப்பிலும், செல்வச்செழிப்பிலும்கூட அவர்களுக்கு வழிகாட்டியாய் இருந்தது அந்த வேத புத்தகமே. அது ஒரு நீர்ப்பாய்ச்சலான தோட்டமாகவே எங்களுக்கு இருந்துவந்திருக்கிறது’ என்றார் அவர்.
தாவீது இராஜா நாள் முழுவதும் வேதம் என் தியானம் என்று சொல்லுகிறாரே. வேதத்தை எப்படி நாம் தியானிப்பது? ஒரு அழகான பூங்காவில் நறுமணமிக்க மலர்கள் ஏராளம் நிரம்பியிருந்தது. முதலில் பெண் ஒருத்தி வந்தாள். ஒரு மலர் அழகாய் இருக்கிறது என்று பார்த்து, பறித்து, முகர்ந்துவிட்டு தலையில் வைத்துக்கொண்டாள். சில நிமிடங்களுக்கெல்லாம் அது வாடி வதங்கிப்போனது.
பின்பு ஒரு வண்ணத்துப்பூச்சி வந்தது. ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு வினாடி அமர்ந்துவிட்டு போய்விட்டது. அதன்பின்பு ஒரு தேனீ பறந்து வந்தது. ஒரு மலரில் அமர்ந்தது. உள்ளே சென்று தேனைப் பருகியது. அதனுடைய கால்களிலெல்லாம் மகரந்த தூளை சேகரித்துக்கொண்டது. அத்தனையையும் நெஞ்சில் அடக்கிக்கொண்டது. தன் கூட்டை நோக்கிப் பறந்து சென்றது.
வேத வாசிப்பில் நாம் அந்த தேனீயைப்போல நடந்துகொள்ளுகிறோமா? சிலர் வேகமாய் வாசித்துவிட்டு கடந்து சென்றுவிடுகிறார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு வேண்டிய ஒரு வாக்குத்தத்தத்தைமட்டும் பிடித்துக்கொள்ளுகிறார்கள். ஆனால் வேறு சிலரோ வேதபுத்தகத்தின் அருகிலே ஆவலாய் உட்கார்ந்து தேனிலும் தெளிதேனிலும் மதுரமான அந்த வார்த்தைகளை உட்கொள்ளுவதுடன் மற்றவர்களுக்கும் கொடுத்து பயனடையச்செய்கிறார்கள்.
சங்கீத புஸ்தகத்தில் தாவீது சொல்லுகிறார், “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங். 1:2,3).
தேவபிள்ளைகளே, வேதவசனங்களை ஆவலோடு வாசிப்பீர்களாக! வேதபுத்தகம் என்பது கர்த்தர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த உன்னதக் கடிதமாக எண்ணி அதை முழு இருதயத்தோடு ஏற்றுக்கொள்வீர்களாக!
நினைவிற்கு:- “அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது” (சங். 19:10).