மே 11 – பாவத்துக்கு மரிப்பதால் ஜெயம்!
“மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி. 15:55,57).
இயேசு உயிர்த்தெழுந்தார். மரணத்தையும், பாதாளத்தையும், சாத்தானையும் ஜெயித்தவராய் ஜெய கெம்பீரமாய் உயிர்த்தெழுந்தார். அவருடைய பிள்ளைகளாகிய நாம் அந்த உயிர்த்தெழுதலின் வெற்றியை சுதந்தரித்துக்கொண்டு, மரணத்தின் முதுகெலும்பைத் தட்டி “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” என்று வெற்றி முழக்கமிடுகிறோம்.
“இயேசு கிறிஸ்து மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, உயிரோடு எழுந்தார்” என்பது சரித்திரம். அதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆனால் அதை வெறும் சரித்திர நிகழ்ச்சியாகவே வைத்துக்கொண்டிருந்தால், நமக்கு எந்த பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை. பயபக்தியோடு சிலுவையண்டையில் வந்து நின்று, “எனக்காகவே நீர் மரித்தீர், எனக்காகவே அடக்கம்பண்ணப்பட்டீர், எனக்காகவே உயிரோடு எழுந்தீர்” என்று சொல்லி மனதார ஏற்றுக்கொள்ளும்போதுமட்டுமே உங்களுக்கு இரட்சிப்பு உண்டாகும்.
இன்னொரு படி இருக்கிறது. அதுவே உங்களை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு வழிநடத்தும். அது என்ன? “கிறிஸ்துவோடு நான் சிலுவையில் அறையப்பட்டேன்; கிறிஸ்துவோடு அடக்கம்பண்ணப்பட்டேன்; கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையினால் வெற்றியுள்ள வாழ்க்கை வாழுவேன்” என்று அறிக்கையிட்டு, அந்த வெற்றியை சுதந்தரித்துக்கொள்வதாகும்.
அப். பவுல் முதலாவது, “கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டேன்” என்று ஒப்புக்கொடுத்தார். இரண்டாவது, “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” என்று சொன்னார் (கலா. 5:24). மூன்றாவது, “அவரால் (கிறிஸ்துவால்) உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது. நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்” (கலா. 6:14) என்றார். இதுதான் வெற்றியின் இரகசியமாகும்.
எந்தச் சூழ்நிலையிலும் பாவ சோதனைகளால் மேற்கொள்ளமுடியாது என்ற உறுதியுடன் வாழ்வதே கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்பட்டேன் என்று அறிக்கையிட்டு கிறிஸ்துவின் வெற்றியை சுதந்தரித்துக்கொள்வதாகும்.
“கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் செயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் செயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்” (ரோம. 6:3-5).
தேவபிள்ளைகளே, கிறிஸ்துவினுடைய பாடுகள், மரணம், உயிர்த்தெழுதலை விசுவாசித்து அதன்பின்பு ஞானஸ்நானம் பெற்றிருப்பீர்களேயானால், எப்போதும் அதை அறிக்கை செய்து ஜெயமுள்ள வாழ்க்கை வாழுங்கள். “மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே” (ரோம. 6:7).
நினைவிற்கு:- “ஆதலால் அவருடைய மரணத்தின் செயலில் நாம் இணைக்கபபட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் செயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்” (ரோம. 6:5).