Appam, Appam - Tamil

ஆகஸ்டு 01 – புதிய மாதம்!

“இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். கர்த்தாவே இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும் (சங்.118:24,25).

இந்த ஆண்டில் ஏழு மாதங்களை வெற்றிகரமாய்க் கடந்து, ஆகஸ்ட் மாதம் முதலாம் நாளைக் காணக் கர்த்தர் கிருபை செய்தார். இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம் என்று சங்கீதக்காரர் சொல்லுகிறார். இந்த மாதம் உங்களுக்கு தேவ பிரசன்னத்தால் நிறைந்து களிகூருகிற ஒரு மாதமாகவும், வெற்றிநடை போட்டு முன்னேறுகிற ஒன்றாகவும் இருக்கட்டும்.

உங்களுடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளையும் கர்த்தருடைய கரத்தில் ஒப்புவித்து, ‘தேவனே, உமது பிரசன்னம் எனக்கு முன்பாகச் செல்லட்டும். நீர் என்னை அன்போடு வழி நடத்தும்’ என்று ஜெபியுங்கள். உங்களுடைய பாரங்களையும் கவலைகளையும் அவர்மேல் வைத்து, அவர் அவற்றிலிருந்து விடுவிப்பார் என்று விசுவாசிப்பீர்களென்றால், அவர் நிச்சயமாகவே உங்களை கரம்பிடித்து நடத்துவார்.

“ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்” (மத். 6:34). ஒவ்வொரு நாளுக்கும் தன்தன் சூரிய உதயமும், சூரிய ஒளியும் இருப்பதைப்போலவே, கர்த்தரின் கிருபையும் காலைதோறும் புதிதாக இருக்கிறது (புல. 3:22,23).

ஒவ்வொரு நாளையும் தேவனுடன் ஆரம்பித்து, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரை ஸ்தோத்திரித்துக்கொண்டேயிருங்கள். தாவீது இராஜா ஒருநாளைக்கு ஏழுமுறை கர்த்தரைத் துதித்தார். “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” என்றார் (சங். 16:8).

ஒவ்வொரு நாளின் பிரச்சனைகளும், போராட்டங்களும், கடமைகளும் உங்களுடைய வாழ்க்கை என்னும் இரதத்தை இழுக்கும் குதிரைகளைப்போல இருக்கக்கூடும். ஆனாலும் உங்களுடைய வாழ்க்கையை வழிநடத்திச் செல்லுகிறவர் கர்த்தர். கர்த்தர்தாமே உங்களைப் பாதுகாப்புடனும், ஜெபத்துடனும் நடத்துவாராக!

வேதம் சொல்லுகிறது: “உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்” (உபா. 9:3).

இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்படி தேவ சித்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். நீங்கள் தேவனுடைய திட்டத்தின் மத்தியில்தான் இருக்கிறீர்களா என்பதை அவ்வப்போது உறுதி செய்துகொள்ளுங்கள்.

உங்களைக்குறித்து கர்த்தருக்கு ஒரு அநாதி நோக்கமும், திட்டமும், தீர்மானமும் உண்டு. நீங்கள் அவருடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருக்கும்படி, கர்த்தர் உங்களைக்குறித்து பெரியதொரு நோக்கம் வைத்திருக்கிறார் (ரோம. 8:29). கர்த்தர் எப்போதும் உங்களுக்கு நன்மையே செய்கிறவர்.

தேவபிள்ளைகளே, மனிதர்கள் தீங்கு செய்ய முன்வரலாம். ஆனால் கர்த்தரோ அந்த தீமையை நன்மையாய் மாற்றி உங்களை ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோம. 8:28).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.