Appam, Appam - Tamil

மே 15 – பெலப்படுத்தும் துணை!

“கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுவதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார் (2 தீமோ. 4:17).

‘கர்த்தரோ எனக்குத் துணைநின்று’ என்று அப். பவுல் சொல்லுகிறதைப் பாருங்கள். கர்த்தர் நமக்குத் துணையாயிருப்பாரானால் அநேக காரியங்களை நாம் கர்த்தருக்காக செய்யமுடியும். யாக்கோபு யோசேப்பை ஆசீர்வதிக்கும்போது, “அவர் உனக்குத் துணையாயிருப்பார்; …. அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், …. உன்னை ஆசீர்வதிப்பார்” (ஆதி. 49:25) என்று சொன்னார்.

ஆம், கர்த்தர் நமக்குத் துணையாக நிற்கும்போது எப்பொழுதும் ஆசீர்வாதமும், வெற்றியும், சந்தோஷமும் நிலவும். இங்கே அப். பவுல், தனக்குக் கர்த்தர் துணைநின்று தன்னைப் பலப்படுத்தினதாகக் கூறுகிறார்.

புறஜாதிகளுக்கும், இராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கவும், பிரசங்கிக்கவும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரம்தான் அப். பவுல். அவர் சபை வளர்ச்சிக்கென்று வேதத்தில் 14 நிருபங்களை எழுதும்படி தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு தேவமனுஷன். தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரன் என்று அழைக்கப்பட்டவர்.

அவர் பல சபைகளை ஸ்தாபிக்கவும், பட்டணங்களில் எழுப்புதல் உண்டாகவும் காரணமாயிருந்தவர். கர்த்தர் எனக்குத் துணைநின்று என்னைப் பெலப்படுத்தினார் என்றும், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13) என்றும் அவர் அறிக்கையிடுகிறார்.

அரசாங்கத்திலே பணியாற்றிக்கொண்டிருந்த என்னுடைய தகப்பனாரை கர்த்தர் முழுநேர ஊழியத்துக்கென்று அழைத்தபோது, அவர் தன்னிடம் வல்லமையோ, சத்துவமோ, பெலனோ ஒன்றுமே இல்லாதவராக உணர்ந்தார். வேதத்தைப் பகுத்து ஜனங்களுக்குச் சொல்லுவதற்குத் தேவையான ஞானமோ, வேத அறிவோ தனக்கு இல்லையென்றே எண்ணினார்.

எல்லாவிதத்திலும் தகுதியில்லாத அவரைக் கர்த்தர் அழைத்து, நீ என் ஜனங்களுக்கு ஆவிக்குரிய உணவு கொடுக்கப்போகிறாய். அனுதின மன்னாவைத் தரப்போகிறாய் என்று சொன்னபோது என் தகப்பனார் ஆச்சரியப்பட்டு கலங்கினார். ஆனால், கர்த்தரோ அவருக்குத் துணைநின்று, சுவிசேஷத்தை உலகத்தின் பல்வேறு தேசங்களுக்கும் கொண்டுசெல்ல அவரை பெலப்படுத்தினார். மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதவும், மாதம்தோறும் அன்றன்றுள்ள அப்பம் இதழை வெளியிடவும் கர்த்தர்தாமே துணை செய்தார்.

“என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும். இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணை செய்கிறார்” (ஏசா. 50:8,9) என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார்.

சங்கீதக்காரர் சொல்லுகிறார்: “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். …. உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது” (சங். 63:7,8). தேவபிள்ளைகளே, கர்த்தர் எப்பொழுதும் உங்களுக்குத் துணைநிற்கிறார். பயப்படாதேயுங்கள்.

நினைவிற்கு:- “நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை” (2 நாளா. 19:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.