மே 08 – கர்த்தரால் வரும்!
“குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்” (நீதி. 21:31).
ஒருமுறை ஒரு வயதான பெற்றோரை சந்திக்கநேர்ந்தது. அவர்கள் இருவருமே ஏழ்மையான நிலையில் இருந்தார்கள். ஆனால் கர்த்தரை நேசித்து பிள்ளைகளுக்கு படிப்பைக் கொடுத்ததுடன், கிறிஸ்துவின்மேலான விசுவாசத்தையும் கொடுத்துவந்தார்கள். அவர்களது ஒன்பது பிள்ளைகளும் உயர் கல்வியை முடித்துவிட்டு மேன்மையான நிலைமையில் இருக்கக்கண்டேன். கர்த்தர் எல்லா பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் ஜெயத்தைக் கட்டளையிட்டார்.
பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல உணவைக் கொடுக்கலாம், அருமையான உடைகளைக் கொடுக்கலாம், ஏராளமான பணத்தைச் செலவழிக்கலாம். ஆனால் அவர்களுக்குக் கிறிஸ்துவைக் கொடுக்காமல்போனால் அவர்கள் மேன்மை அடைவதில்லை. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். கர்த்தரை நேசிப்பதே வெற்றியின் ஆரம்பம்.
பிள்ளைகள் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்தாலும் ஜெயம் கொடுக்கிறவர் நம் தேவனாகிய கர்த்தரே! அதை உணர்ந்துதான் சாலொமோன் ஞானி எழுதுகிறார்: “குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்” (நீதி. 21:31).
யுத்தத்திலே அவர்களை தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார் என்று சகரியா 10:3-ல் நாம் வாசிக்கிறோம். பரீட்சைகளை எதிர்பார்த்து நின்றாலும் சரி, வேலை வாய்ப்புக்காக நின்றாலும் சரி, முன்னேற்றத்திற்காக நின்றாலும் சரி, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைச் சிறந்த குதிரைகளாக நிறுத்துவார்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய பிரசன்னம் எப்போதும் உங்களோடு இருக்கட்டும். எப்போதும் எல்லா முயற்சிகளுக்கும் அவரை உங்களுடைய முதன்மையாக வையுங்கள். வேதம் சொல்லுகிறது, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக்கொடுக்கப்படும்” (மத். 6:33). “உன் வழிகளிளெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதி. 3:6).
என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும் (யாத். 33:14). தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார். கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார் (மீகா 2:13). எந்த பிரச்சனையானாலும் சரி, கர்த்தர் உங்களுக்கு ஜெயத்தைக் கட்டளையிடுவார்.
கானான் தேசத்தில் ராட்சத பிறவிகள் இருக்கிறதைக்குறித்து யோசேப்பும் காலேபும் கவலைப்படவில்லை. அது எவ்வளவு உறுதியான அரணான பட்டணம் என்பதைக் குறித்தும் அக்கறைக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்னது என்ன? கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தர் நம்முடனே இருக்கிறார். நாம் அதை எளிதாய் ஜெயிக்கலாம் என்றார்கள் (எண். 14:8).
தேவபிள்ளைகளே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் 1 கொரி. 15:57) என்று சொல்லி அவரைத் துதியுங்கள்.
நினைவிற்கு:- “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8).