Appam, Appam - Tamil

ஜூன் 23 – எம்மாவு!

“அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள் (லூக். 24:13).

வாழ்க்கை என்பது ஒரு பயணம். உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த பயணத்தை எங்கே முடிக்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது.

அன்று ஒரு மனிதன் தனிமையாய் தன் பயணத்தை எருசலேமிலிருந்து துவங்கி எரிகோவை நோக்கிச்சென்றான். ஆனால், அந்தோ, பாதிவழியிலே அவன் கள்ளர் கைகளில் சிக்குண்டான். அவனுடைய நிலைமை பரிதாபமாய் இருந்தது. இங்கே பாருங்கள். வேறு இரண்டு பேர் எருசலேமிலிருந்து எம்மாவூர் என்னும் கிராமத்திற்குப் பயணமாய் போனார்கள்.

எருசலேம் என்றால், அங்கே தேவாலயம், தேவனுடைய மக்கள், துதி ஆராதனை, தேவனுடைய பாடல்கள், தேவனுடைய மகிழ்ச்சி என அனைத்து தேவ ஆசீர்வாதங்களும் உண்டு. ஆனால் இந்த இரண்டுபேரும் அப்படிப்பட்ட மேன்மையான தேவனுடைய இடத்தை விட்டுவிட்டு எம்மாவூர் கிராமத்தை நோக்கிப் பயணமானார்கள். துக்க முகத்தோடும், யூதர்களுக்கு பயந்தவர்களாயும், இவர்களால் என்ன ஆபத்து நேரிடுமோ என்ற கலக்கத்துடனும் பயணித்தார்கள்.

ஆனால் அந்த வேளையில் எதிர்பாராதவிதமாக இயேசு கிறிஸ்து அவர்களைச் சந்தித்தார். ஆனால் அவர்களோ, அவர்தான் இயேசு என்று அறிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய கண்கள் துக்கத்தினால் மறைக்கப்பட்டிருந்தன. இயேசு அன்போடு அவர்களை நோக்கி அவர்கள் துக்க முகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார் (லூக். 24:17).

தேவனைவிட்டு தூரமாய்ப் போகிறவர்களின்மேல் கர்த்தர் எத்தனை அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பதையும், எவ்வளவு அன்பாய் விசாரிக்கிறார் என்பதையும் பாருங்கள். மனுஷர் பயத்திலும், பாவபயத்திலும், சஞ்சலத்திலும், துக்கத்திலும் நடந்துசெல்லுகிறவர்களைக் கைவிட கர்த்தர் விரும்பவில்லை. அவருடைய அன்புக்கரங்கள் அவர்களை அரவணைக்கிறது!

நீங்கள் இந்த உலகத்தின் பாதையிலே துக்க முகமுடையவர்களாய் கடந்து செல்லக்கூடும். சஞ்சலத்தோடும், மனவிரக்தியோடும் நடந்து செல்லக்கூடும். ஆனாலும் உங்களை ஆற்றித்தேற்றுகிற கர்த்தர் ஒருவர் உண்டு. உங்களைச் சந்தித்து நல்வழிப்படுத்துகிற கர்த்தர் ஒருவர் உண்டு. இன்று இயேசு உங்களைச் சந்திக்க விரும்புகிறார். உங்கள் கண்ணீரைத் துடைத்து நேர்வழியில் திருப்ப கர்த்தர் விரும்புகிறார்.

அன்றைக்கு எம்மாவூர் சீஷர்கள் அவரை அந்நியனைப்போல எண்ணினார்கள். வேதம் சொல்லுகிறது, “அப்பொழுது அவர் (இயேசு) அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்” (லூக். 24:17,18).

ஆனால் அவர் அந்நியராய் இருக்கவில்லை. அன்பு சிநேகிதனாய் அருகிலே வந்து அவர்களுடைய வாழ்க்கையைத் திருப்பினார். தேவபிள்ளைகளே, நிச்சயமாகவே உங்கள் வாழ்க்கையையும் அவர் திருப்புவார்.

நினைவிற்கு:- “அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள்” (லூக். 24:31).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.