Appam, Appam - Tamil

ஜூன் 21 – கறையில்லாதவர்கள்!

“ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள் (2 பேது. 3:14).

உலகத்தின் முடிவையும், கர்த்தருடைய வருகையையும் நாம் நெருங்கியிருக்கிறோம். வருகை சமீபமாய் இருக்கிறது என்று அறிந்துகொண்டால்மட்டும் போதாது. நாம் அதற்காக ஆயத்தப்படவேண்டியது மிகவும் அவசியம். இதற்குப் பேதுரு சில ஆலோசனைகளைத் தருகிறார்.

முதலாவதாக, நாம் கறையற்றவர்களாய் இருக்கவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையான இரட்சிப்பின் வஸ்திரத்திலே உலகம், மாம்சம், பிசாசு ஆகிய மூன்றும் கறையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. கர்த்தருடைய மணவாட்டியாக வெண்வஸ்திரம் தரித்து பரிசுத்தமாய் விளங்கவேண்டிய நாம், உலகத்தினால் கறைபடாதபடி நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டியது அவசியம். இயேசுவினுடைய இரத்தத்தினாலே நம்முடைய அங்கிகளை நாம் பரிசுத்தமாய் தோய்த்து வெளுக்கவேண்டியது அவசியம்.

நம்முடைய ஆத்துமாவைக் கறைபடுத்தக்கூடிய உறவுகள், பரிசுத்தத்தை தீட்டுப்படுத்தக்கூடிய சம்பாஷணைகள், மனச்சாட்சியை வாதிக்கக்கூடிய செயல்கள் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு ஜெபத்திலேயும், வேத வாசிப்பிலேயும், தேவனுடைய பிள்ளைகளின் ஐக்கியத்திலேயும் நாம் நிலைத்து நிற்கவேண்டும். உலகத்திற்கு சிநேகிதனாய் இருக்க விரும்புகிறவன் தேவனுக்கு பகைஞனாயிருக்கிறான். ஆகவேதான் அப். யோவான், “என் பிள்ளைகளே, உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்” என்று சொல்லுகிறார்.

மட்டுமல்ல, பிழையில்லாதவர்களாகவும் நாம் நடந்துகொள்ளவேண்டும். பிழை என்றால் என்ன? தேவனுடைய அளவுகோலுக்கும், எதிர்பார்ப்புக்கும் கீழாக வாழ்வதுதான் பிழை. தேவ வசனத்திற்கு எதிரிடையான ஒவ்வொன்றும் பிழைதான். சிறுபிள்ளைகள் தங்கள் பாடங்களை எழுதும்போது பிழையுடன் எழுதினால் மீண்டும் அவர்கள் அதே தவறைச் செய்யக்கூடாது என்பதற்காக, பிரம்பினால் அடித்து திருத்துகிறோம்.

கர்த்தரும்கூட நம்மிடத்திலே பிழையைக் காணும்பொழுது சிட்சைகளை அனுப்புகிறார். வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் …. நீங்கள் சிட்சையை சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?” என்று அவர் கேட்கிறார் (எபி. 12:6,7).

மூன்றாவதாக, சமாதானத்தோடு அவருடைய சந்நிதியில் காணப்படவேண்டுமாம் என்று பேதுரு சொல்லுகிறார். நாம் இரட்சிக்கப்படும்போது தேவசமாதானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம் (ரோம. 5:1). அதோடு நின்றுவிடக்கூடாது. நம்முடைய வாழ்க்கையிலே எவ்வளவு புயல் வீசினாலும், பெரும் காற்று சீறினாலும், கடல் கொந்தளித்தாலும் கர்த்தரைப் பூரணமாய் சார்ந்துகொண்டு பெற்ற சமாதானத்தைக் காத்துக்கொள்ளவேண்டும்.

தேவபிள்ளைகளே, வேதம் சொல்லுவதுபோல நாம் கறையற்றவர்களாய், பிழையில்லாதவர்களாய், சமாதானத்தோடே காணப்படுவோமாக!

நினைவிற்கு:- “அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்” (1 யோவா. 2:28).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.