Appam, Appam - Tamil

மே 09 – உலகத்தை ஜெயித்தேன்!

“உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார் (யோவா. 16:33).

ஒரு மனிதன் மூன்றுவிதங்களிலே சோதிக்கப்படுகிறான். முதலாவது, அவன் தன் சுயஇச்சைகளினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான் (யாக். 1:13). இரண்டாவது, சோதனைக்காரனான சாத்தானாலே சோதிக்கப்படுகிறான் (மத். 4:3, 2 கொரி. 2:11). மூன்றாவது, கர்த்தராலே சோதிக்கப்படுகிறான்.

சோதனை நிறைந்த உலகத்திலே நாம் வாழுகிறோம். கண்களின் இச்சைகள், மாம்சத்தின் இச்சைகள், ஜீவனத்தின் பெருமை ஆகியவை ஒவ்வொருநாளும் தேவனுடைய பிள்ளைகள்மேல் பலமாய் மோதுகின்றன. சோதனையில் விழுந்துவிட்டாலோ மனச்சாட்சி வாதிக்கிறது. உற்சாகம் விலகிப்போகிறது. மனச்சோர்வு பற்றிப்பிடிக்கிறது.

ஆகவேதான் பொதுவான ஜெபத்தில், “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்று கர்த்தர் ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார் (மத். 6:13).

ஆதி பெற்றோரான ஆதாமும், ஏவாளும் சோதனைக்குட்பட்டு, பாவத்தில் விழுந்தார்கள். கர்த்தர் புசிக்கக்கூடாது என்று சொல்லியிருந்த நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்ததினால் சோதனை அவர்களை மேற்கொண்டது. அதன் விளைவாக பூமியில் சாபமும், நோயும், மரணமும் வந்தன.

இப்பொழுது நீங்கள் சோதனையை ஜெயிப்பதற்கென கர்த்தர் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை கொடுத்திருக்கிறார். மறுபக்கத்தில் சாட்சியின் ஜீவியமான வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்” (வெளி. 12:11).

சோதனை நேரங்களில் திடமுள்ளவர்களாய் நிற்கும்படிக்கு, பரிசுத்தவான்களை கர்த்தர் பல்வேறு பாடுகளிலே புடமிட்டு பொன்னாய் விளங்கும்படி தகுதிப்படுத்துகிறார். மோசேக்கு வனாந்தரமான வாழ்க்கையையும், யோசேப்புக்குச் சிறைச்சாலையையும், தாவீதுக்கு மலைகள், குகைகள், குன்றுகள் ஆகியவற்றையும் யோபுக்கு தாங்க முடியாத வியாதிகளையும், அப். பவுலுக்குப் பாடுகள், அடிகள், நிந்தைகள் ஆகியவற்றையும் ஏற்படுத்தினார்.

அப். யோவானுக்கு தனிமையான பத்மு தீவின் சிறையிருப்பு நேர்ந்தது. இப்படி சரீரத்தில் அனுபவிக்கும் பாடுகள் அனைத்தும் ஆத்துமாவில் தெய்வீக பெலத்தையும், உறுதியையும் கொண்டுவருகின்றன. “உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” (ரோம. 8:36,37).

தேவபிள்ளைகளே, போராட்டநேரங்களில் உங்கள் கண்கள் கிறிஸ்துவின்மேல் பதிந்திருக்கட்டும். மேகம்போன்ற திரளான சாட்சிகள் நீங்கள் எப்படி சோதனைகளை சந்திக்கிறீர்கள் என்பதை ஆர்வத்தோடு பரலோகத்திலிருந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்” (யாக். 1:12).

நினைவிற்கு:- “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” (ரோம. 8:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.