ஜூன் 13 – ஜெபம்பண்ணும்பொழுது!
“நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு” (மத். 6:6).
மத்தேயு எழுதிய சுவிசேஷத்தில் 5,6,7 ஆகிய மூன்று அதிகாரங்களும் மலைப்பிரசங்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைப்பிரசங்கத்தில் கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கையைக்குறித்து 23 வகையான தலைப்புகளில் இயேசு போதித்தார். அதிலே உபவாசம், ஜெபம் போன்ற தலைப்பின் கருத்துக்கள் மிக முக்கியமானவை. கர்த்தர் கற்றுக்கொடுத்த ‘மாதிரி ஜெபம்’ இங்கே இடம் பெற்றிருக்கிறது.
இயேசுவின் நாட்களிலே அநேக மாயக்காரர்கள் இருந்தார்கள். வீண் அலப்பல்களுக்கும், அதிக வசனிப்புகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். மனிதர் பார்வையிலே பக்திமான்களைப்போல வேஷமிடும் வீணான ஜெபங்களே மலிந்துகிடந்தன. ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பது எப்படி என்பதும், ஜெபிப்பது எப்படி என்பதும் யூத ஜனங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் ஜெபம்பண்ணுவதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார் என்பதை இயேசு அவர்களுக்கு உணர்த்திக் காண்பித்தார் (மத். 6:8). ஆனாலும் நாம் ஜெபிக்கவேண்டியது நம் கடமை. சோர்ந்துபோகாமல் விடாமுயற்சியோடு ஜெபிக்கவேண்டியதும் நம் கடமை. அந்த ஜெபம் நம்முடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாகவே தேவனை நோக்கி ஏறெடுக்கப்படவேண்டும்.
ஜெபம் கிறிஸ்தவ வாழ்க்கையிலே மாபெரும் தூண். இந்த தூண் உறுதியாய் இருந்தால்தான் ஆவிக்குரிய வாழ்வு உறுதியாக இருக்கும். மட்டுமல்ல, ஜெபம் கர்த்தர் நமக்குக் கொடுத்த மாபெரும் சிலாக்கியமாகும். நமது சுமைகள், பாரங்கள், கண்ணீர், கவலை, மன வேதனைகள் எல்லாவற்றையும் ஜெபநேரத்தில் கர்த்தருடைய பாதத்தில் இறக்கி வைத்துவிடுகிறோம். நமது அன்பையும், நன்றியையும் ஸ்தோத்திரத்தோடு அவருக்கு தெரியப்படுத்துகிறோம். ஜெபம் பரலோக பிதாவோடு நேரடியான தொடர்பை நமக்கு ஏற்படுத்திக்கொடுக்கிறது. ஆம், நிச்சயமாகவே ஜெபநேரம் என்பது பரலோகமும், பூலோகமும் ஒன்றாய் இணைக்கப்படுகிற ஒரு நேரமாயிருக்கிறது.
அப். பவுல் சொன்னார், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி. 4:6,7). நாம் நம்முடைய ஜெப வேண்டுதல்களை ஸ்தோத்திரத்தோடு பிதாவுக்கு தெரியப்படுத்துவோமானால் நமக்குள்ளே வாசம்பண்ணுகிற ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்திச்செல்லுவார் (யோவா. 16:13).
கர்த்தர் நம்மை ஆற்றித் தேற்றுகிற நேரம் ஜெப நேரம்தான். அவருடைய அன்புக்கரம் நம்முடைய கண்ணீரைத் துடைத்து, நம்மைத் திடப்படுத்தி பெலப்படுத்துகிறது. அவருடைய பிரசன்னம் நம்மை உற்சாகப்படுத்தி சகாயம் செய்கிறது. ஆவிக்குரிய ஜீவியத்திலே பாதுகாப்பு, வல்லமை, ஐக்கியம் எல்லாமே ஜெபத்தினால்தான் கிடைக்கிறது. ஆகவேதான் தாவீது இராஜா, “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” என்றார் (சங். 121:1,2).
நினைவிற்கு:- “அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்” (மத். 6:6).