ஜூன் 18 – மறக்கப்படுவதில்லை!
“இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை” (லூக். 12:6).
கர்த்தருடைய வார்த்தைகள் எவ்வளவாய் நம்மைத் தேற்றுகின்றன! ஆகாயத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள் என்று கர்த்தர் சொன்னார். ஆமாம், ஆகாயத்துப் பறவைகளைக் கவனிக்கும்போது, அவைகளைக் கண்காணிக்கிற பரமபிதா நம்மை எத்தனை அதிகமாய் அன்பு செலுத்தி கண்காணிப்பார் என்கிற விசுவாசம் நமக்குள் வருகிறது.
குருவிகளில் பெலவீனமானது அடைக்கலான் குருவியாகும். அவைகளுடைய சிறகுகள் மயிலைப்போல அழகானதாய் இல்லை. குரல் குயிலைப்போல இனிமையானதாய் இல்லை. உணவுக்காகப் புசிக்கிற வான்கோழியைப்போல இறைச்சி ருசிமிக்கதாக இல்லை. அது மிகவும் மென்மையானது. மனிதனுடைய அடைக்கலத்தைத் தேடி ஓடிவரக்கூடியது.
ஆனால் கர்த்தரோ அந்த அடைக்கலான் குருவிகளின்மேலும் கரிசணை உள்ளவரானார். உலகத்தார் அவற்றை விலைபேசிக்கொண்டிருந்தாலும், கர்த்தருடைய சித்தமில்லாமல் அவைகளில் ஒன்றாகிலும் கீழே விழுவதில்லை.
அடைக்கலான் குருவியைப்போல ஆயிரக்கணக்கான ஆகாயத்துப் பறவைகள் உலகத்தில் இருக்கின்றன. அவை சிறியதும் பெரியதுமானவை. பல்வேறு பழக்கவழக்கங்கள் உடையவை. ஆனால் பரமபிதா அவைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொருநாளும் போஷிக்கிறார். அவைகள் எதிர்காலத்தைக்குறித்துக் கவலைப்படுவதும் இல்லை; சேமித்து வைப்பதுமில்லை.
தேவபிள்ளைகளே, அந்த தேவன் உங்களைப் போஷிக்க அறிந்திருக்கிறார். உங்களுடைய எல்லாக் காரியத்தின்மேலும் கண்ணும் கருத்துமுடையவராயிருக்கிறார். இது எத்தனை மேன்மையானது! அவர் லட்ச லட்சமான இஸ்ரவேலரை வனாந்தரத்திலே போஷிக்கவில்லையா? ஒவ்வொருநாளும் வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்தருளவில்லையா? காடைகளை அவர்களுடைய பாளயத்தில் வந்து விழச்செய்யவில்லையா? (உபா. 2:7).
எலியாவைப் பாருங்கள். பஞ்சகாலத்திலே அற்புதமாய் காகங்கள் மூலமாய் போஷித்தார். குடிப்பதற்கு கர்த்தர் கேரீத் ஆற்றுத் தண்ணீரைக் கொடுத்தார். இன்னும் பஞ்சம் அதிகமானபோது சாறிபாத் விதவையின் வீட்டில் மாவும் எண்ணெயும் குறையாதபடிச் செய்து தம்முடைய தீர்க்கதரிசியைப் பராமரித்தார். எலியா வனாந்திரத்திலே இருந்தபோது தேவ தூதனை அனுப்பி ஆகாரம் ஊட்டினார். ஆ! நம்முடைய ஆண்டவருடைய அன்பும் கரிசனையும் எத்தனை அதிகமானது!
புதிய ஏற்பாட்டுக்கு வாருங்கள். இயேசுகிறிஸ்து இரவும் பகலும் வனாந்தரத்தில் பிரசங்கித்தபோது, ஐயாயிரம் பேரைப் போஷித்தார். ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும்கொண்டு ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்தளித்தார். ஆம், அந்த தேவன் நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் சந்திக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
ஆகையினால் அப். பவுல் எழுதும்போது, “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி. 4:19) என்று எழுதினார்.
நினைவிற்கு:- “உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!” (சங். 31:19).