Appam, Appam - Tamil

மே 03 – பகைவர்களை ஜெயங்கொள்ளுங்கள்!

“மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான். மோசேயின் கைகள் அசந்துபோயிற்று (யாத். 17:11,12).

ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நாம் ஜெயங்கொள்ளும்படியாக, சாத்தானை மேற்கொள்ளும்படியாக அழைக்கப்பட்டவர்கள். கர்த்தர் இன்று நமக்கு ஜெயத்தை தந்தருளுவார்.

அன்று இஸ்ரவேல் ஜனங்கள் கானானை நோக்கிப் பிரயாணித்தபோது அமலேக்கியர் அவர்களை எதிர்த்தார்கள். யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்காக யுத்தம் செய்யும்படி போர் வீரர்களை அழைத்துகொண்டு முன்னேறிச்சென்றார். அந்த வேளையில் மோசே தன் கையில் தேவனுடைய கோலை எடுத்துக்கொண்டு மலை உச்சியில் ஏறி, தன்னுடைய கையை வானத்துக்கு நேராக ஏறெடுத்தான். மோசேயின் கை ஏறெடுக்கப்பட்டிருக்கையில் இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையைத் தாழவிடுகையில் அமலேக்கியர் மேற்கொண்டார்கள்.

சற்று சிந்தித்துப்பாருங்கள். ஜெயத்தின் இரகசியம் யுத்த வீரர்களின் கையில் மட்டுமல்ல, தேவ சமுகத்திலிருந்து கைகளைத் தேவனுக்கு நேராய் உயர்த்துகிற மோசேயின் பக்கமாகவும் இருந்தது. ஒரு குடும்பத்தின் ஆசீர்வாதம் தேவ சமுகத்திலே நின்று குடும்பத்துக்காக பாரத்தோடு ஜெபிக்கிறவர்களின் பக்கம் இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

அன்றைக்கு இஸ்ரவேலருக்கு அமலேக்கியரோடு யுத்தம் நடந்ததுபோல நமக்கும் ஒரு யுத்தம் உண்டு. அந்த யுத்தம் வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும், துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடுமே நமக்கு இருக்கிறது (எபே. 6:12).

இந்த யுத்தத்தில் நாம் நமக்காக ஜெபிப்பதுடன், நம்முடைய குடும்பத்தினருக்காகவும், இனத்தவர்களுக்காகவும், தேவ ஊழியர்களுக்காகவும், இந்தியாவுக்காகவும் ஜெபிக்கிறவர்களாய் இருக்கவேண்டும். நம்முடைய கரங்கள் எப்போதும் தேவசமுகத்திலே ஏறெடுக்கப்பட்டு, ஒருவரையொருவர் ஜெபத்தில் தாங்குகிறவர்களாய் இருக்கவேண்டும். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (கலா. 6:5).

மோசே நீண்டநேரம் கைகளை உயர்த்திக்கொண்டிருந்தபோது, அவனுடைய கைகள் தளர்ந்தன. அவன் ஒருவனால் நீண்டநேரம் தொடர்ச்சியாக கையை உயர்த்திக்கொண்டிருக்க முடியவில்லை. ஆகவே ஆரோனும், ஊரும் அவனுடைய கைகளைத் தாங்கினார்கள் என்று பார்க்கிறோம். ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமக்கிறது மாத்திரமல்ல. பலவீனருடைய பலவீனங்களையும் நாம் தாங்கவேண்டும்.

வேதம் சொல்லுகிறது: “பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்” (ரோம. 15:1,2).

தேவபிள்ளைகளே, உங்களுடைய கைகள் கர்த்தருக்கு நேராய் ஏறெடுக்கப்பட்டிருக்கும்போது உங்களைத்தாங்க பரிசுத்த ஆவியானவரும் உங்கள் அருகிலே இருக்கிறார் என்பதை மறந்துபோகாதேயுங்கள். அவர் உங்களுடைய பலவீன நேரங்களில் உங்களுக்கு உதவி செய்கிறார்.

நினைவிற்கு:- “உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும் (சங். 18:35).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.