மே 07 – ஜெயம் தரும் திசை!
“கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது” (சங்.75:6).
வேதத்தில் மொத்தம் 150 சங்கீதங்கள் இருக்கின்றன. இதிலே தாவீது எழுதின சங்கீதங்கள் 73 ஆகும். ஆசாப் என்ற பக்தன் எழுதியது 12 சங்கீதங்களாகும். கோராகு புத்திரர் எழுதின சங்கீதங்கள் 11 ஆகும். சாலொமோன் 2 சங்கீதங்களை எழுதியிருக்கிறார். மோசே ஒரு சங்கீதத்தையும், ஈத்தன் என்பவர் ஒரு சங்கீதத்தையும் எழுதியிருக்கிறார். இவைபோக, அறியப்படாத ஆக்கியோன்களினால் எழுதப்பட்ட 50 சங்கீதங்களும் வேதத்தில் உண்டு. இந்த சங்கீதங்களின்மூலம் பரிசுத்தவான்களுடைய உள்ளங்களின் தன்மையை நாம் அறிந்துகொள்ளுகிறோம்.
இன்றைக்கு நாம் தியானிக்கிற வேத வசனத்திலே, ஆசாப் என்ற பக்தன் ஒரு உண்மையை கூறுகிறார். கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாய் எதிரிகள் புறப்பட்டு வரும்போது அவர்கள் தங்கள் அருகிலுள்ள மற்ற தேசங்கள் முன்வந்து தங்களுக்கு உதவி செய்யாதா என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். கிழக்கேயிருக்கிற எகிப்திலிருந்து உதவி வராதா, மேற்கேயிருந்து உதவிக்கு யாராவது குதிரைப்படைகளை அனுப்பமாட்டார்களா, என்றெல்லாம் எண்ணி ஏங்கி கண்பூத்துப் போனதே தவிர உதவி வரவில்லை. நாம் பார்க்கவேண்டிய திசை மேற்கும், கிழக்கும், வடக்கும், தெற்கும் அல்ல. அப்படியானால் நாம் எந்த திசையை நோக்கிப்பார்ப்பது?
தாவீது இராஜா சொல்லுகிறார், “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங். 121:1,2). நாம் நேசிக்கிற ஆண்டவராகிய கர்த்தரே நமக்கு ஒத்தாசை அனுப்புகிறவர். கொஞ்சம்பேரோ, அதிகம்பேரோ, ஜெயத்தைக் கொடுப்பது அவருடைய கைகளிலேயே இருக்கிறது.
இஸ்ரவேலருக்கு விரோதமாய் கடற்கரை மணலத்தனையான மீதியானியர் வந்தபோது கிதியோன் கிழக்கையும், மேற்கையும், வடக்கையும், தெற்கையும் நோக்கிப்பார்க்கவில்லை. மேலே நோக்கிப்பார்த்து கர்த்தரையே சார்ந்துகொண்டார். கர்த்தர் அவர்களோடு இருந்ததினாலே முன்னூறுபேரை வைத்துக்கொண்டு மீதியானியரின் பாளயத்தயே கிதியோன் முறியடித்துப்போட்டார்.
ஒரு நாள் எசேக்கியா இராஜாவுக்கு விரோதமாய் யுத்தம் வந்தது. அசீரியா இராஜாவான சனகெரிப் கலங்கும்படியான நிருபங்களை எழுதி அனுப்பினான். அவ்வளவு பெரிய அசீரியரின் யுத்த வீரர்களை எப்படி மேற்கொள்ளுவது? கிழக்கை நோக்கிப்பார்ப்பதா? மேற்கை நோக்கிப்பார்ப்பதா? இரண்டுமல்லாமல், அவர் தேவனையே நோக்கிப்பார்த்தார். ஜெயம் கர்த்தரிடத்திலிருந்துதான் வரும். கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பியபோது ஒரு தேவதூதன் அசீரியரின் பாளையத்திற்குள் புகுந்து லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள் (ஏசா. 37:36).
தேவபிள்ளைகளே, நீங்கள் பலவிதமான பிரச்சனைகளில் சிக்கியிருந்திருக்கக்கூடும். யார் இந்த பிரச்சனையிலிருந்து விடுவிப்பார் என்று நீங்கள் திகைத்து நின்றிருக்கக்கூடும். கர்த்தர் இன்றைக்கு கொடுக்கிற வாக்குத்தத்தம் என்ன? கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரத் திசையிலிருந்து ஜெயம் வராது. கர்த்தரிடத்திலிருந்துதான் ஒத்தாசை வரும் என்பதே.
நினைவிற்கு:- “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி. 15:57).