Appam, Appam - Tamil

மே 14 – சாட்சியின் வசனம்!

“தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள் (வெளி. 12:11).

உங்களுடைய தோல்வி ஜெயமாய் மாறும்படி, வேதம் சுட்டிக்காண்பிக்கிற பலவிதமான சர்வாயுதவர்க்கங்களைப்பற்றி நாம் தியானித்துவருகிறோம். நீங்கள் வெற்றிபெறவேண்டுமென்றால், உங்களுக்கு சாட்சியுள்ள பரிசுத்த ஜீவியம் மிகவும் அவசியம். பரிசுத்தமுள்ளவனோடுதான், கர்த்தர் இணைந்து செயல்படுகிறார்.

சாட்சியுள்ள ஜீவியத்தின் அஸ்திபாரம், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறதிலேயே இருக்கிறது. வேதம் சொல்லுகிறது, “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” (அப். 1:8).

சாட்சியின் ஜீவியம் என்பது, வாரத்திலே ஒருநாள் ஆலயத்திலே எழும்பி, என் தலைவலி போனது, கால்வலி போனது என்று சபையாருக்கு அறிவிக்கிற சாட்சி போன்றதல்ல. சாட்சியான முன்மாதிரியான வாழ்க்கை வாழ்வதுதான் சாட்சியின் ஜீவியமாகும். உங்கள் வாய் பேசுவதைவிட, உங்களுடைய வாழ்க்கை பேசவேண்டும். மற்றவர்கள் புகழும்வகையில் அது அமையவேண்டும்.

வெறும் சுவிசேஷத்தை மட்டும் அறிவித்து, சாட்சியை இழந்துபோனால், அந்த சுவிசேஷத்தை யாரும் கேட்கவும்மாட்டார்கள், அதில் நம்பிக்கை வைக்கவும்மாட்டார்கள். இயேசுவண்டை வரவும்மாட்டார்கள். இதனால்தான் மகாத்மா காந்தி, ஒருமுறை “நான் கிறிஸ்துவை நேசிக்கிறேன்; ஆனால், கிறிஸ்தவர்களையோ வெறுக்கிறேன்” என்று சொன்னார். அவர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, கிறிஸ்தவர்களாயிருந்த வெள்ளைக்காரர்கள் அவரை வெளியே தள்ளி, “கறுப்பனே, வெளியே போ” என்று சொன்னதே அதன் காரணம். அவருடைய உள்ளம் புண்பட்டது. இதனால்தான் கிறிஸ்தவ மார்க்கத்தின்மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை.

புதிதாக இரட்சிக்கப்பட்டவர்களில்கூட சிலர் கிறிஸ்தவர்களின் மோசமான ஜீவியத்தைப் பார்த்து, பின்மாற்றத்திற்குள் சென்றுவிடுகிறார்கள். கிறிஸ்தவ மார்க்கத்திற்கு எதிர்ப்பாயிருந்த ஒரு இயக்கத் தலைவர், இரட்சிக்கப்பட்டார். குடும்பத்திலே அவருக்கு பெரிய எதிர்ப்பு நிலவியது. அவரைக் கொலைசெய்யவும் திட்டமிட்டார்கள். ஒருநாள் தனக்கு ஞானஸ்நானம் கொடுத்த போதகரே இரகசியமாக ஒரு இடத்திலே நின்று, புகைத்துக்கொண்டிருப்பதை அந்தப் புதிய விசுவாசி பார்த்துவிட்டார். இதை இவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த சூழ்நிலை அந்த சகோதரனை பின்மாற்றத்திற்குள் செல்ல வழிவகுத்தது.

சங்கீதக்காரர் சொல்லுகிறார், “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” (சங். 119:11). ஜெயமுள்ள வாழ்க்கை பரிசுத்தத்தோடும் வேதவசனத்தோடும் இணைந்த ஒன்றாகும். மேலும், அது ஆவியானவரோடும் இணைந்ததாகும். அந்த சாட்சியின் வசனம்தான் சாத்தானை ஜெயிக்க உங்களுக்கு உதவியாயிருக்கும்.

நீங்கள் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடக்கும்போது, சாட்சியுள்ள ஜீவியம் செய்பவரா என்பதை சாத்தான் கூர்ந்து கவனிப்பான். தேவபிள்ளைகளே, பரிசுத்தமுள்ள ஜீவியம் உங்களுக்குப் பரலோகத்தைத் திறக்கும்.

நினைவிற்கு:- “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்” (யோவா. 16:33).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.