Appam, Appam - Tamil

மே 23 – கடைசிவரை நடத்துவார்!

“இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் (சங். 48:14).

கர்த்தர் நம்மை முற்றுமுடிய சதாகாலங்களிலும் நடத்துவார். மரண பரியந்தமும் நடத்துவார். அதற்காகவே உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களிலும் அவர் நம்மோடுகூடவே இருக்கிறார் (மத். 28:20).

சிறுவயதில் பெற்றோரும், மாணவப்பருவத்தில் ஆசிரியர்களும், வேலைஸ்தலத்திலே அதிகாரிகளும் நம்மை நடத்துகிறார்கள். ஆனாலும் நம்மை கடைசிவரையிலும் நடத்துகிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தரே. சதாகாலங்களிலும் நம்முடைய தேவனாயிருக்கிற அவரே நம்மை மரணபரியந்தம் நடத்துவார்.

மரணத்தோடு வாழ்க்கை முடிந்துவிடுகிறதா? இல்லை. மரணத்திற்கப்பாலும் கர்த்தர் நம்மை நித்திய இராஜ்யத்திற்குள் வழிநடத்துகிறார். ஒளிமயமான தேசத்திலே, இராக்காலமே இல்லாத பரலோக இராஜ்யத்திலே நம்மை ஜீவ நீரூற்றுகளண்டையில் வழிநடத்துகிறார்.

ஒருநாள் தாவீது தன்னை வழி நடத்தும்படி கர்த்தருடைய கரத்தில் ஒப்புவித்தார். கர்த்தரை தன்னுடைய மேய்ப்பராய் ஏற்றுக்கொண்டார். முடிவில் அவர் சொல்லுகிறார், “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங். 23:6). அதுதான் அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையும், விசுவாச அறிக்கையுமாயிருந்தது.

அப். பவுலுடைய வாழ்க்கையைப் பாருங்கள். தமஸ்கு வீதியிலே தேவன் அவரைச் சந்தித்தபோது ‘நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்’ என்று கேட்டு தன்னை வழிநடத்தும்படி கர்த்தருடைய கரத்திலே ஒப்புவித்தார். எந்தெந்த தேசங்களுக்குப் போகவேண்டும், எந்தெந்த மக்களைச் சந்திக்கவேண்டும் என்பதையெல்லாம் ஆவியானவருடைய வழிநடத்துதலின்படியே நிறைவேற்றினார்.

பல்வேறு சபைகளுக்கு நிருபங்களை எழுதும்போது கர்த்தருடைய வழி நடத்துதலைத் தெரிவித்தார். “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்துவார்” (பிலி. 1:5) என்று சொல்லி அதை வெளிப்படுத்தினார்.

தன் வாழ்நாளெல்லாம் கர்த்தரையே வழிநடத்த ஒப்புக்கொடுத்த அவர் மரண நேரத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். “நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்” (2 தீமோ. 4:6-8).

தேவபிள்ளைகளே, இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன். ஆகவேதான் வெளிப்படுத்தின விசேஷத்தில் நம்மை வழிநடத்துவதாக வாக்களிக்கிறார். “சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்” (வெளி. 7:17).

நினைவிற்கு:- “பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்” (சங். 90:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.