மே 17 – விடுவிப்பார்!
“நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” (சங். 34:19).
ஏன்தான் நமக்கு இத்தனை துன்பங்கள் ஏற்படுகின்றனவோ என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. சாதாரண உலகத்தாரைப்பார்க்கிலும் தேவனுடைய பிள்ளைகளுக்கு நிச்சயமாகவே அதிக துன்பங்கள் உண்டு, நாம் உலக வழிபாடுகளின்படி, உலத்தாரின் மார்க்கத்தின்படி நடந்திருப்போமானால் உலகம் நம்மை சிநேகித்திருக்கும்.
கர்த்தருக்கென்று பிரதிஷ்டையோடு, அர்ப்பணிப்போடு பரிசுத்தமான வாழ்க்கை வாழ முற்படும்போது, நிச்சயமாகவே உலகமும் மாமிசமும் பிசாசும் நம்மை எதிர்த்துநிற்கத்தான்செய்யும். வேதம் சொல்லுகிறது, “தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2 தீமோ. 3:12).
இயேசு கிறிஸ்துவும்கூட சுகபோகமான கிறிஸ்தவ வாழ்க்கையை நமக்குப் பின்பற்றுவதற்கென முன்வைக்கவில்லை. இயேசு சொன்னார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவா. 16:33).
இயேசு கிறிஸ்துதாமே உபத்திரவத்தின் பாதையில் நடந்து சிலுவையைச் சுமந்தார். “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மத். 16:24) என்றார்.
சீஷர்கள் உபத்திரவத்தின் பாதையிலே நடந்தார்கள். ஒரு பக்கம் யூதர்களால் உபத்திரவம், மறுபக்கம் ரோம அரசாங்கத்தால் உபத்திரவம். பலர் இரத்த சாட்சிகளாய் மரிக்கவேண்டியதிருந்தது. ஆனாலும் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் உபத்திரவத்தின் பாதையிலே நடந்துபோனார்கள்.
உலகம் அவர்களுக்கு பாத்திரமாய் இருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும், மலைகளிலேயும், குகைகளிலேயும், பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள் (எபி. 11:38). ஏன் அவர்கள் துன்பத்தை சகித்தார்கள்? வேதம் சொல்லுகிறது, “மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்” (எபி. 11:35).
கிறிஸ்துவினிமித்தம் வருகிற துன்பத்தின் பாதையில் நடக்கிறவர்களுக்கு ஒருபக்கம் கர்த்தர் விடுதலையை வாக்குப்பண்ணியிருப்பதுடன், மறுபக்கம் தேவ மகிமையையும் வாக்குப்பண்ணியிருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” (சங். 34:19).
தானியேல் நீதிமானாய் இருந்ததினிமித்தம் எத்தனை பொறாமைக்கண்களை சந்திக்கவேண்டியதிருந்தது! சிங்கங்களின் கெபியில் போடப்படுகிற நிலைமை வந்தபோதுகூட கர்த்தர்தாமேகூட அவருடன் நின்று அவரை விடுவித்தார்.
தேவபிள்ளைகளே, அநேக உபத்திரவங்கள்மூலமாகத்தான் பரலோக இராஜ்யத்தில் நாம் பிரவேசிக்கமுடியும். இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல என்று வேதம் சொல்லுகிறது.
நினைவிற்கு:- “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்” (சங். 91:14).