ஜூலை 17 – இன்றைக்கே மேன்மை!
“கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்” (யோசு. 3:7).
இன்று உங்களை மேன்மைப்படுத்துவேன் என்று கர்த்தர் வைராக்கியமாய் சொல்லுகிறார். கர்த்தர் உங்களை உயர்த்தி மேன்மைப்படுத்தும்போது எந்த மனிதனாலும் உங்களை ஒதுக்கிக் கீழ்ப்படுத்தவே முடியாது. கர்த்தர் தருகிற மேன்மை நிரந்தரமானதும், மேன்மையானதுமாகும்.
மோசேக்குப் பின்பாகக் கர்த்தர் யோசுவாவைத் தெரிந்துகொண்டு பெரிய பொறுப்பை அவரது கைகளில் கொடுத்தார். இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும் பொறுப்பு, கானானில் உள்ள இராஜாக்களுக்கும் ஜாதிகளுக்கும் விரோதமாய் யுத்தம் செய்யவேண்டிய பொறுப்பு, தேசத்தை ஜனங்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பு என பல பொறுப்புகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. ‘எப்படி நான் இதைச் செய்து முடிப்பேன்? ஜனங்களோ முரட்டாட்டமான முறுமுறுக்கிற ஜனங்களாயிருக்கிறார்களே. அவர்கள் எப்படி எனக்குக் கீழ்ப்பட்டிருப்பார்கள்?’ என்று கலங்கிய யோசுவாவைக் கர்த்தர் மனதுருக்கத்தோடு நோக்கிப்பார்த்து, “உன்னை மேன்மைப்படுத்துவேன்” என்றார்.
அவர் சொன்னபடியே யோசுவாவை அன்றைக்கு மேன்மைப்படுத்தினார். ஆம், கர்த்தர் உங்களையும் உயர்த்தவும் மேன்மைப்படுத்தவும் சித்தமாயிருக்கிறார். அது ஒருவேளை ஒரு பதவி உயர்வாய் இருக்கலாம். அல்லது, புதிய பொறுப்புகள், உத்திரவாதங்கள் உங்களுக்குத் தரப்படலாம். கர்த்தருடைய கண்களிலே உங்களுக்கு தயவு கிடைத்திருக்கிறதினால் அதை இன்றைக்கே செய்தருளுவார்.
வேதம் சொல்லுகிறது, “எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்” (1 நாளா. 29:12). ஆனால் நாம் செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அவருடைய பலத்த கரத்தில் தாழ்மையோடு அடங்கியிருக்கவேண்டும் என்பதே அது.
மேலும், “அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்” (உபா. 28:1) என்று வேதம் சொல்லுகிறது. சிலரைக் கர்த்தர் மேன்மைப்படுத்தும்போது மனமேட்டிமையாகிவிடுகிறார்கள். நேபுகாத்நேச்சாருக்கு கர்த்தர் கனத்தையும் மகிமையையும் மேன்மையையும் கொடுத்தபோது அவர் தன்னைத் தாழ்த்தாமல் பெருமையடைந்துவிட்டார்.
பாபிலோன் இராஜ்யத்தின் அரண்மனையிலே உலாவி, “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னார். இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய். மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்” (தானி. 4:30-32) என்று உரைத்தது. பெருமை காரணமாக அவர் உடனே மனுஷரினின்று தள்ளப்பட்டு மிருகம்போலானார்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் ஏற்கெனவே உங்களை மேன்மைப்படுத்தியிருக்கிறார். அவருக்கு முன்பாக நீங்கள் தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (செப். 3:20).