Appam, Appam - Tamil

செப்டம்பர் 12 – ஆழத்தின்மேல் இருள்!

“ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார் (ஆதி. 1:2).

ஒழுங்கின்மையை இருள் என்று சொல்லுகிறார்கள். பாவ வாழ்க்கையை அந்தகாரம் என்று சொல்லுகிறார்கள். இருள் என்பது, துஷ்ட மிருகங்களின் நேரம். பொல்லாத மனிதர் ஆட்சி செய்யும்போது, இருள் தேசத்தைச் சூழ்ந்துகொள்ளுகிறது.

பாவிகளும், துன்மார்க்கரும், அக்கிரமக்காரரும் உலகில் இன்று பெருகிவிட்டார்கள். உலகம் ஒரு காரிருளை நோக்கிச்செல்லுகிறது. அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சியை நோக்கிச்செல்லுகிறது. வேதம் சொல்லுகிறது, “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்” (ஏசா. 60:2).

இருளின் ஆதிக்கம் மாறி, தேவனுடைய மகிமை உதிக்கும்படி நீங்கள் ஜெபிக்கவேண்டியது அவசியம். ஆவியானவருடைய அசைவாடுதல் இருக்கும்போது, அவர் பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும் கண்டித்து உணர்த்துவார். அப்பொழுது பாவிகள் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி கண்ணீரோடு மனந்திரும்புவார்கள். “ஐயோ, நான் பாவியாய் வாழ்ந்துவிட்டேனே, எனக்கு பாவ மன்னிப்பு வேண்டுமே, இரட்சிப்பின் சந்தோஷம் வேண்டுமே” என்று தங்களுடைய நிர்பாக்கிய நிலைமையை உணர்ந்து மனந்திரும்புவார்கள்.

மின்சார வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ உங்களுடைய ஆத்துமாவுக்குள் பிரகாசத்தைக் கொண்டுவர முடியாது. கர்த்தருடைய ஆவியானவர் ஒருவர்தான் உங்கள் உள்ளத்திலிருக்கும் காரிருளை அகற்றக்கூடியவர். பவுல், சவுலாக இருந்த காலத்தில் பக்திவைராக்கியமுள்ளவராய் இருந்தார். ஆனால் அவர் உள்ளத்தில் இருள் இருந்தபடியால், சபைகளைப் பாழாக்கினார். கிறிஸ்தவர்களை ஒடுக்குவதும், தொல்லை தருவதும், அழிப்பதும் தேவனுக்கு செய்யும் தொண்டு என்று அவர் எண்ணினார்.

ஒருநாள் அவர் தமஸ்கு வீதியிலே சென்றுகொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சம் அவர்மேல் வீசியது. அவர் வாழ்வில் எத்தனை மகிமையான மாறுதல்கள்! இயேசுகிறிஸ்து மேசியாவாய் அவருடைய வாழ்க்கையில் பிரவேசித்தார். பாவியிலும், பிரதான பாவி என்று உணரச்செய்தார். அவருடைய உள்ளத்தை மூடியிருந்த இருள் விலகியது. சத்தியத்தை அறிந்துகொண்டார். எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியானவர் நிச்சயமாகவே உங்களுடைய ஆத்துமாவிலே வெளிச்சத்தையும், மகிமையையும் கொண்டுவருவார்.

ஒரு காலத்தில் சாது சுந்தர்சிங் கிறிஸ்துவை அறியாமல் இருளின் ஆதிக்கத்திலே சிக்கியிருந்தார். இயேசுகிறிஸ்துவைப்பற்றி மோசமாய் பேசினார். வேதாகமத்தை கிழித்துத் தீயிலே போட்டார். ஒருநாள் ஆவியானவர், அவர் வாழ்க்கையில் அசைவாடினார். அந்த அசைவாடுதல் மாபெரும் மாறுதலைக் கொண்டுவந்தது. இயேசுவுக்காக எல்லாவற்றையும் வெறுத்து வெறும் காலோடு இந்தியா முழுவதும் நடந்து கர்த்தருடைய நாமத்தை உயர்த்தினார். இந்தியாவின் அப்போஸ்தலனானார்.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வெளிச்சத்துக்கு வாருங்கள். ஆவியானவர் உங்களுடைய வாழ்க்கையிலே அசைவாட இடம் கொடுங்கள். வல்லமையுள்ளவர் மகிமையான காரியங்களை நிச்சயமாகவே செய்வார்.

நினைவிற்கு:- “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோம. 8:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.