ஜூன் 27 – ஸ்தோத்திரம் அப்பா!
“தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” (1 இரா. 8:56).
சாலொமோன் கர்த்தருக்கென்று மகிமையான ஆலயத்தைக் கட்டி பிரதிஷ்டை செய்தபோது சர்வாங்க தகனபலிகளை மட்டுமல்லாமல், உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலிகளையும் அன்போடு செலுத்தினார். தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளிச்செய்த கர்த்தரை ஸ்தோத்திரித்தார்.
ஆம், இளைப்பாறுதலும் சமாதானமும் கர்த்தரிடத்திலிருந்து வருகிற பெரிய ஆசீர்வாதங்களாகும். எல்லாப்புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை உங்கள் உள்ளத்திலே தந்திருக்கிற ஆண்டவரை மனதார ஸ்தோத்திரித்திருக்கிறீர்களா?
தாவீது இராஜாவின் நாட்களில் அநேக யுத்தங்கள் நடந்தன. அநேக வீரர்கள் அவற்றிலே மரித்தார்கள். ஏராளமான இரத்தம் சிந்தப்பட்டது. ஆனால் அந்த யுத்தங்கள் தாவீதின் நாட்களிலே முடிந்துபோயின. சாலொமோன் இராஜ்யம் சமாதானத்தின் இராஜ்யமாய் இருந்தது.
மட்டுமல்ல, எல்லா சத்துருக்களிலிருந்தும் இஸ்ரவேல் ஜனங்கள் பாதுகாக்கப்பட்டு இளைப்பாறுதலை அடைந்தார்கள். அமைதியாய் தங்கள் வீடுகளில் வாசம்பண்ணினார்கள். இஸ்ரவேலருக்கு கர்த்தர் பாராட்டின அந்த பெரிய அன்பை சாலொமோன் மறந்துவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்.
ஒவ்வொருநாளும் காலையிலிருந்து இரவுவரை கர்த்தர் பாராட்டுகிற நன்மைகளை எண்ணிப்பார்த்து துதியுங்கள். ஒரு பக்தன் பாடும்போது “எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள், கர்த்தர் செய்த நன்மைகள் யாவும், ஆசீர்வாதம்! எண்ணு ஒவ்வொன்றாய், கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்” என்று பாடுகிறார். ஆகவே தேவன் அருளிய இளைப்பாறுதலுக்காகவும், சமாதானத்துக்காகவும் அவரைத் துதியுங்கள்.
கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பாருங்கள். ஸ்தோத்திரமும், துதியும் அவர் வாயிலிருந்தது. வேதம் சொல்லுகிறது, “ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்” (மாற். 8:6). ஸ்தோத்திரம்பண்ணினபோது அற்புதம் நடந்தது.
அப்போஸ்தலனாகிய பவுலும் கிறிஸ்துவினுடைய அடிச்சுவட்டிலே நடக்கத் தவறவில்லை. கடல் பயணத்தில் கப்பல் சேதமானபோது பவுல் எல்லாரையும் திடப்படுத்தினார். “ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான். இப்படிச் சொல்லி, அப்பத்தை எடுத்து, எல்லாருக்கு முன்பாகவும் தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான். அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள்” (அப். 27:34-36) என்று வேதம் சொல்லுகிறது.
அந்த ஸ்தோத்திரம் திடனற்றுப்போனவர்களை ஸ்திரப்படுத்தினது. தேவ மனுஷன் ஸ்தோத்திரம்பண்ணி புசித்த முன்மாதிரி மற்றவர்களையும் ஸ்தோத்திரம்பண்ண உற்சாகப்படுத்தினது. தேவபிள்ளைகளே, ‘உங்கள் ஸ்தோத்திரத்தினால் அற்புதம் நடக்கும். சோர்ந்துபோன கைகள் திடனடையும், கிருபை பெருகும். ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்’ என்று கர்த்தர் சொல்லுகிறார் அல்லவா!
நினைவிற்கு:- “ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது” (சங். 136:4).