ஜூன் 16 – இயேசுவோ!
“அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான். இயேசுவோ பேசாமலிருந்தார்” (மத். 26:62,63).
இயேசு மௌனத்தையே தன்னுடைய பதிலாகக் கொடுப்பதை இங்கு பார்க்கிறோம். இயேசுவுக்கு விரோதமாய் அநேகர் எழும்பி பொய்சாட்சி சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், பிரதான ஆசாரியனுக்கு முன்பாக இருந்த இயேசுவோ தன்னுடைய நீதி நியாயங்களை எடுத்துரைக்கவில்லை. அவர் பேசாமல் மௌனமாயிருந்தார்.
பேசுவதற்கு ஒரு காலம் உண்டு, மௌனமாய் இருப்பதற்கு ஒரு காலம் உண்டு (பிர. 3:7) என்று வேதம் சொல்லுகிறது. இயேசு வனாந்திரங்களில் நின்று கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கித்தார். ஜெபஆலயங்களிலே உபதேசித்தார். அவர் மலையின்மேல் ஏறி நின்றபொழுது திரளான ஜனங்கள் அவருக்கு முன்பாக வந்திருந்தார்கள். அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்குப் பிரசங்கித்தார்.
ஆனால், விபச்சாரத்தில் கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்ட ஸ்திரீயை அவர்முன் நிறுத்தி அவள்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சாட்டியபோதோ அவர் மவுனமாய் தரையிலே குனிந்து ஏதோ எழுதிக்கொண்டேயிருந்தார். அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டபொழுதுதான் ‘உங்களில் பாவமில்லாதவன் முதலாவது அவள்மீது கல்லெறியக்கடவன்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் மௌனமானார். கல்லெறிய வந்தவர்கள் அமைதியாய் திரும்பிச்சென்றுவிட்டார்கள்.
மௌனம் சில வேளைகளிலே வல்லமையான ஆயுதமாகவும் செயல்படுகிறது. மௌனத்தில் பெரிய காரியங்களை சாதித்தவர்களும் உண்டு. புகழ் பெற்ற தாமஸ் ஹெம்பிஸ் என்பவர் ‘கிறிஸ்துநாதர் அநுசாரம்’ என்ற புத்தகத்தின் முகவுரையிலே ‘மௌனம் என் சிநேகிதன், ஜெபம் என் கூட்டாளி’ என்று எழுதுகிறார். வேறொரு பக்தன், ‘மனிதனிடம் பேசுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். கர்த்தரிடம் பேசுவதை அதிகமாக்குங்கள்’ என்றார்.
தாவீது இராஜாவின் அனுபவம் என்ன தெரியுமா? “என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன். நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்” என்று குறிப்பிடுகிறார் (சங். 39:1,2). இதனால் ஏற்பட்ட விளைவு என்ன? அடுத்த வசனம் சொல்லுகிறது, “என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்” (சங். 39:3).
நாம் மௌனமாய் இருக்கும்போது, கர்த்தர் நமக்காகப் பேசுவார். நமக்காக வழக்காடி யுத்தம்செய்வார். கர்த்தர் சொல்லுகிறார், “சீயோனினிமித்தமும், எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்” (ஏசா. 62:1).
தேவபிள்ளைகளே, நீங்கள் உங்களுக்காகப் பேசினால் கர்த்தர் மவுனமாய் இருப்பார். நீங்கள் மௌனமாயிருந்தால் கர்த்தர் உங்களுக்காக யுத்தம்செய்வார். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்செய்ய இடம் கொடுப்பீர்களா? கர்த்தர் உங்கள் காரியங்களையெல்லாம் பொறுப்பெடுத்திருக்கிறார். அவர் உங்களுக்காக யாவையும் செய்துமுடிப்பார்.
நினைவிற்கு:- “கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது” (ஆப. 2:20).