Appam, Appam - Tamil

ஜூன் 12 – அற்புதங்கள்!

“ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான் (அப். 6:8).

ஆதித்திருச்சபையில் பெரிய எழுப்புதலைக் கொண்டுவந்த ஸ்தேவான் சாதாரணமான நிலைமையில் இருந்து உயர்ந்தவர். முதல் சபையிலே உதவிக்காரராய் இருந்தவர். பந்திவிசாரிப்பை கவனிக்கும்படி நியமிக்கப்பட்டவர். அப்படியிருந்தும் கர்த்தர் ஸ்தேவானை வல்லமையாகவும், பலமாகவும் பயன்படுத்தினார். காரணம், ஸ்தேவான்மேல் தேவனுடைய நிறைவு இருந்தது. மூன்று காரியத்தில் அவர் நிறைந்திருந்தார்.

முதலாவது ஸ்தேவான் பரிசுத்த ஆவியினாலே நிறைந்திருந்தார் என்று அப். 6:5ல் வாசிக்கிறோம். பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வது ஒரு அடிப்படை அனுபவம். ஆனாலும், எப்பொழுதும் ஆவியினால் நிறைந்து ஜீவிப்பதே உன்னதமான அனுபவமாய் இருக்கிறது.

பரிசுத்த ஆவியில் நிரம்பியிருக்கும்பொழுது, தேவ பெலத்தாலும், கிருபை வரங்களினாலும், ஆவியின் வரங்களினாலும் நிரம்பியிருப்போம். ஆகவேதான் இயேசுகிறிஸ்து, நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரையிலும் எருசலேமிலே காத்திருங்கள் என்றார் (லூக். 24:49). நீங்கள் பரிசுத்த ஆவியால் நிரம்பியிருந்தால் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்யும் வல்லமையைப் பெறுவீர்கள்.

இரண்டாவதாக, ஸ்தேவான் விசுவாசத்தினால் நிறைந்தவராய் இருந்தார் (அப். 6:8). “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” (எபி. 11:6). ஜெபம்பண்ணும்பொழுது விசுவாசத்தோடே பண்ணவேண்டும். பெற்றுக்கொள்ளுவோம் என்ற நம்பிக்கையோடே கேட்கவேண்டும். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாயிருக்கும்.

ஸ்தேவான் கர்த்தரை விசுவாசத்தோடு பற்றிக்கொண்டார். விசுவாசத்தினால் எல்லாம் கூடும் என்பதை அறிந்திருந்ததினாலே அந்த விசுவாசத்தை செயல்படுத்தி அற்புதங்களைச் செய்தார். நீங்கள் கர்த்தரை விசுவாசிப்பீர்களேயானால், எந்த மலையும் உங்களுக்கு முன்பாக நிற்கமுடியாது. எந்த தடையும் உங்களைத் தடுத்து நிறுத்தமுடியாது.

மூன்றாவதாக, ஸ்தேவான் வல்லமையினால் நிரம்பியிருந்தார். நம் ஒவ்வொருவருக்கும் வல்லமை தேவை. அபிஷேகத்தின்மூலமாக அந்த வல்லமையை பெற்றுக்கொள்கிறோம். வேதம் சொல்லுகிறது, “நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்” (அப். 10:38).

அந்த வல்லமை பரலோகத்தின் வல்லமையாயும், தேவனுடைய வல்லமையாயும் இருக்கிறது. ஸ்தேவானை நிரப்பின அதே கர்த்தர் இன்றைக்கு உங்களையும் பரிசுத்த ஆவியினாலும், விசுவாசத்தினாலும், வல்லமையினாலும் நிரப்ப விரும்புகிறார். உங்கள் பாத்திரம் நிரம்பி வழியும்படியாக உங்களை நிரப்புவார். அவர் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற தேவனாகிய கர்த்தர் அல்லவா! தேவபிள்ளைகளே, ஸ்தேவானை பயன்படுத்தினவர் பட்சபாதமுள்ளவர் அல்ல, உங்களையும் பயன்படுத்த வல்லமையுள்ளவர்.

நினைவிற்கு:- “கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்” (மாற். 16:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.