Appam, Appam - Tamil

ஜூன் 09 – பெலனை ஸ்திரப்படுத்து!

“சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து (நாகூ. 2:1).

மேலே உள்ள வசனத்தில் ஒரு அவசரத்தன்மையைக் காணமுடிகிறது. இது பரலோக தேவனிடத்திலிருந்து துரிதமாய் வருகிற அவசரச் செய்தியாயும், ஒரு எச்சரிக்கை வசனமாயும், அபாயச் சங்குபோல முழங்குகிறது.

1990-ஆம் ஆண்டு குவைத் தேசத்தைப் பிடிப்பதற்கு சதாம் உசேனின் இராணுவ வீரர்கள் லட்ச லட்சமாக ஈராக் தேசத்திலிருந்து புறப்பட்டு வந்தார்கள். அது நள்ளிரவு நேரமாயும், யாரும் எதிர்பார்த்திராத ஒரு சூழ்நிலையாயும் இருந்தது. ஈராக் தேசத்தின் ராணுவம் வருகிறதை குவைத் அறியவில்லை. ஆனால் அமெரிக்க தேசம் அதை அறிந்ததால் குவைத் இராஜாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அவசரமான செய்தி அனுப்பினார்கள். அவர் உடனடியாக தப்பி சவுதி அரேபியாவுக்கு சென்றுவிடவேண்டும் என்பதையும் எந்தப் பாதையில் எப்படிப் போகவேண்டும் என்பதையும் அவசரமான செய்தியாக அனுப்பினார்கள்.

செய்தியை அறிந்த இராஜா தன்னுடைய குடும்பத்தினரோடு ஹெலிக்காப்டரில் பறந்தார். மற்றவர்கள் காரில் தப்பிச்சென்றார்கள். ஆனால் பட்டத்து இளவரசனோ, மெய்மறந்து தூங்கிக்கொண்டிருந்தான். இரவில் நீண்ட நேரம் குடித்து, வெறித்து, நடனமாடி, விருந்துண்டு வந்திருந்த அவன் எந்த அவசர செய்திக்கும் செவிசாய்க்கவில்லை. அபாய சங்குகள் ஒலிக்கிற சத்தங்களெல்லாம் அவன் காதிலே கேட்கவில்லை. ஆகவே அவன் ஒருவன்மாத்திரம் ஈராக் படையிடம் சிக்கிக்கொண்டான். பரிதாபமாக துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி மரித்தான்.

கர்த்தர் இன்றைக்கு நம்மை எச்சரிக்கிறார். சாத்தானைக்குறித்து சிதறடிக்கிறவன் வருகிறான் என்று எச்சரிக்கிறார். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவுமே வருகிறான் (யோவா. 10:10) என்று வேதத்தில் வாசிக்கிறோம். அவன் மனுஷ கொலை பாதகன், பொய்யும் பொய்க்குப் பிதாவுமானவன். யாரை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிற சிங்கமாயிருக்கிறான். அவன் தந்திரமான வலுசர்ப்பத்தைப்போன்றவன். அவன் அபத்தோன், அப்பல்லியோன் என்றும், ‘உன்னுடைய அரணைக் காத்துக்கொள்; பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து’ என்றும் வேதம் எச்சரிக்கிறது.

தேவனுடைய ஜனங்களின் பெலன் வீணாய்ப்போய்விடக்கூடாது. அநேகர் பாவத்தில் வாழ்கிறதினாலே பெலனற்றவர்களாயும், உறுதியற்றவர்களாயும் தவிக்கிறார்கள். குற்ற மனச்சாட்சி வாதிக்கும்போது சாத்தானை அவர்களால் எதிர்த்து நிற்கமுடிவதில்லை. சிங்கம்போல் தைரியமாய் நிற்கவேண்டிய அவர்கள் நரிகளைப்போல பதுங்குகிறார்கள். கோழைகளைப்போல புறமுதுகிட்டு ஓடுகிறார்கள். கெம்பீரமாய் தலைநிமிர்ந்து நடக்கவேண்டியவர்கள் கூனிக்குனிந்து நனைந்த கோழிபோல மாறிவிடுகிறார்கள்.

ஆனால் ஆண்டவர் உங்களைப்பார்த்து, “மகனே, மகளே, உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து” என்று சொல்லுகிறார். கர்த்தருக்காக யுத்தம் செய்யவேண்டுமானால், நம்முடைய பெலன் அதிகரிக்கப்பட்டே ஆகவேண்டும். தேவபிள்ளைகளே, ஸ்திரப்படுவீர்களாக! கர்த்தரிலே பெலன்கொள்வீர்களாக!

நினைவிற்கு:- “உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடை செய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து” (ஏசா. 54:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.