ஜூன் 08 – சீயோனின் ஆசீர்வாதங்கள்!
“வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக” (சங். 134:3).
ஆசீர்வாதம் என்ற சொல் எத்தனை இனிமையானது! எல்லாருக்கும் தாங்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டுமென்ற எண்ணம் உண்டு. பெற்றோரின் ஆசீர்வாதத்திற்காக பிள்ளைகள் ஏங்குகிறார்கள். ஆசிரியர்கள், பெரியவர்கள், மேன்மக்கள் ஆகியோருடைய ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறார்கள். அதேநேரம், கர்த்தருடைய ஊழியக்காரரின் ஆசீர்வாதமும் நமக்குத் தேவை.
சங்கீதத்தில் பல இடங்களில் சீயோனின் ஆசீர்வாதங்களைக்குறித்துக் காணலாம். மேலே சொன்ன வசனத்தை வாசித்துப்பாருங்கள். அது கர்த்தரால் சீயோனிலிருந்து வருகிற ஆசீர்வாதத்தைக்குறித்து பேசுகிறது. ‘வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக’ என்று சொல்லி தாவீது ஆசீர்வதிக்கிறார்.
சங்கீத புஸ்தகத்திலே, “கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்” (சங். 128:5) என்று எழுதப்பட்டிருக்கிறது. சீயோனிலிருந்து வரும் உன்னதமான ஆசீர்வாதங்களும் உண்டு. அதே நேரத்தில் இம்மைக்குரிய உலக ஆசீர்வாதங்களும் நமக்கு உண்டு.
உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைக்குறித்து உபாகமம் 28-ம் அதிகாரம் 1-14 வசனங்களில் வாசிக்கலாம். உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருக ஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றெல்லாம் வரிசையாக அந்த ஆசீர்வாதங்களைக் காணலாம்.
அதே நேரத்தில் சீயோனுக்குரிய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் நமக்கு உண்டு. “அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே. 1:3) என்று வேதம் சொல்லுகிறது. ஆம், கிறிஸ்துவுக்குள்ளிருந்து உன்னதமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் நமக்கு உண்டு.
அவை என்ன? முதலாவது சீயோனிலிருந்து நமக்குக் கிடைக்கிற இரட்சிப்பின் சந்தோஷம். இயேசு நம்முடைய பாவங்களை மன்னித்தார். சாபங்களை முறித்தார். தேவனுடைய பிள்ளைகளின் ஐக்கியத்தைத் தந்தார் என்று உணரும்போது அது நமக்கு பெரிய ஆசீர்வாதமாய் இருக்கிறது. பாதாளத்தின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட்டு பரலோகப் பாதையில் செல்லுகிறோம் என்கிற உணர்வு எத்தனை பெரிய ஆசீர்வாதம்!
இரண்டாவதாக, சீயோனின் ஆசீர்வாதங்களில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மிக முக்கியமானது. பிதாவின் சிங்காசனத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள ஆவிக்குரிய பரிசுத்த ஆவியானவர் இறங்கி நம் ஆத்துமாவை நிரப்புவது எத்தனை மகிழ்ச்சியான காரியம்! உன்னத பெலன் நமக்குள் வருகிறது. ஜீவ ஆவி நமக்குள் ஊற்றப்படுகிறது. கிறிஸ்துவின் வரங்கள் நமக்குள் கிரியை செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. ஆவியின் கனிகளெல்லாம் நமக்குள் காணப்படுவது உன்னத ஆசீர்வாதம் அல்லவா?
தேவபிள்ளைகளே, கடைசி நாளில் “மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” (யோவே. 2:28) என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார். பெற்றுக்கொள்ளுவீர்களா?
நினைவிற்கு:- “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோவா. 1:2).