Appam, Appam - Tamil

ஆகஸ்டு 31 – புதிய மனுஷனைத் தரித்துக்கொள்!

“அந்தபடி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள் (எபே. 4:22-24).

நீங்கள் வல்லமையைத் தரித்துக்கொள்ளவேண்டுமென்றால், புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் கர்த்தருக்காக எழும்பமுடியும். பழைய மனுஷன் மோசம்போகிற இச்சைகளால் நிறைந்தவன். புதிய மனுஷன் நீதியின்படி உள்ளவன் (எபே. 4:22). கர்த்தரே அந்தப் புதிய, உள்ளான மனுஷனை ஒரு மனிதனுக்குள் சிருஷ்டிக்கிறார்.

ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், புதிய சிருஷ்டியாய் இருக்கிறான். பழையவைகளெல்லாம் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின. உங்களுடைய வாழ்க்கையிலே பழைய கந்தைகளை எறிந்துவிட்டு, கிறிஸ்துவின் நீதியைத் தரித்துக்கொள்ளுங்கள். அன்றைக்கு பர்திமேயு என்ற குருடனை ஆண்டவர் அழைத்தபோது, அவன் ஏற்கனவே போட்டிருந்த சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டான். ஆதாமின் சட்டை எனக்கு வேண்டாம். பழைய பாவ மனுஷன் எனக்கு வேண்டாம். என் சுயநீதியெல்லாம் அழுக்கான கந்தையைப்போல் இருக்கிறது. கர்த்தர் தருகிற இரட்சிப்பின் வஸ்திரம் எனக்குப் போதுமானது என்று கிறிஸ்துவை நோக்கி நடந்தான்.

இளைய குமாரன் மனந்திரும்பி தகப்பனண்டை வந்தபோது, அவனுடைய அழுக்கான வஸ்திரம் நீக்கப்பட்டது. உயர்ந்த வஸ்திரம் கொடுக்கப்பட்டது (லூக். 15:22). நீங்கள் களைந்துபோடவேண்டிய வஸ்திரங்களைக் களைந்துபோடாவிட்டால், புதிய ஆவிக்குரிய வஸ்திரங்களை தரித்துக்கொள்ளமுடியாது.

தேவமகிமையை இழந்து அத்தியிலை உடையை உடுத்தியிருந்த ஆதாம் ஏவாளுக்கு கர்த்தர் தோல் உடையை உண்டாக்கிக் கொடுத்தார். அப்படியே உங்களுக்கு ஆவிக்குரிய வஸ்திரங்களை கொடுக்கும்படி இயேசு சிலுவையிலே அடிக்கப்பட்டார். நீங்கள் கர்த்தருடைய குடும்பத்தில் இணைந்திருக்கிறீர்கள். இராஜாதி இராஜாவின் பிள்ளைகளாகவும், சுதந்திரர்களாகவும் விளங்குகிறீர்கள். கர்த்தர் உங்கள் வஸ்திரங்களைக் கவனிக்கிறார். ஆவிக்குரிய மகிமையான வஸ்திரங்களைத் தருகிறார்.

‘எழும்பு எழும்பு சீயோனே’ என்று சொன்ன கர்த்தர் கூடவே ‘உன் அலங்காரமான வஸ்திரங்களைத் தரித்துக்கொள்’ என்று சொல்லுகிறார். ஆவிக்குரிய மகா மேன்மையான ஒரு வஸ்திரம் உண்டென்றால் அந்த வஸ்திரம் கிறிஸ்துவே. கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே (கலா. 3:27). “துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்” (ரோம. 13:14).

கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளவேண்டுமென்றால் கிறிஸ்துவினுடைய குணாதிசயங்களையும், சுபாவங்களையும் தரித்துக்கொள்ளவேண்டும். அவரது இரக்கம், மனதுருக்கம், தயவு, காருண்யம், அன்பு, சந்தோஷம், பரிசுத்தம் என்கிற அவரது எல்லா பண்புகளையும் தரித்துக்கொள்ளவேண்டும். இயேசு மனத்தாழ்மையோடு சீஷர்களின் பாதங்களைக் கழுவினார். ஞானஸ்நானம் பெறும்படி தம்மைத் தாழ்த்தி யோவான்ஸ்நானனிடம் வந்தார். உங்களிடம் அந்தத் தாழ்மை உண்டா?

நினைவிற்கு:- “நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது” (யோபு 29:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.