Appam, Appam - Tamil

ஆகஸ்டு 28 – மெய்யான திராட்சச்செடி!

“நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர் (யோவா. 15:1).

சிருஷ்டி கர்த்தராகவும், நம்மை உருவாக்கினவராகவும் கர்த்தர் இருக்கிறார். சில வேளைகளில் தகப்பனைப்போல அவருடைய அன்பை ருசிக்கிறோம். தாயைப்போல அவருடைய ஆறுதலையும், தேறுதலையும் பெறுகிறோம். உடன்பிறந்த சகோதரனிலும் மிகுந்த பாசமுள்ளவராக நமது குடும்பத்தில் அவர் இருக்கிறார். ஒரு போதகராகவும், ஆலோசனைக்கர்த்தராகவும் அவர் நம்மை வழிநடத்துகிறார். வனாந்தரமான இந்த உலகத்திலே சார்ந்துகொள்ளக்கூடிய ஆத்தும நேசராகவும், மணவாளனாகவும் விளங்குகிறார்.

இயேசு எப்படிப்பட்டவரோ என்று அறிய காட்டத்திமரத்தில் ஏறின சகேயுவுக்கு அவர் இரட்சகராய் தன்னை வெளிப்படுத்தினார் (லூக். 19:4,9). அவர் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டியாக பாவநிவாரணபலியாகக் காணப்படுகிறார். இன்னும் நெருங்கி வரும்போது, அவர் அபிஷேக நாதராகவும், பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுக்கிறவராகவும் காணப்படுகிறார்.

அவர் எப்படிப்பட்டவரோ என்று அறிய விரும்பும் போது, பரம வைத்தியனாக, நோய்களையெல்லாம் குணமாக்குகிறவராக காணப்படுகிறார். தாவீதைக் கேட்டால், “கர்த்தர் என்னுடைய மேய்ப்பராய் இருக்கிறார். நான் அவருடைய மந்தையின் ஆடாய் இருக்கிறேன்” என்று பதில் சொல்லுவார்.

ஆனால் மேலே உள்ள வசனத்திலே, இயேசுகிறிஸ்து தாம் யார் என்றும் பிதா யார் என்றும் இரண்டு வெளிப்பாடுகளைக் கொடுக்கிறதைப் பார்க்கிறோம். தன்னைக்குறித்து அவர், “நான் மெய்யான திராட்சச்செடி” என்று கூறுகிறார். “என் பிதா திராட்சத்தோட்டக்காரர்” என்று பிதாவைப்பற்றித் தெரிவிக்கிறார். மூன்றாவதாக, திராட்சச்செடியிலே இருக்கிற கொடிகளே விசுவாசிகள். “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்” (யோவா. 15:5) என்று வேதம் சொல்லுகிறது.

கர்த்தர் இந்த மேன்மையான உறவுமுறையை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்போது, கூடவே தம்முடைய எதிர்பார்ப்பையும் சொல்லுகிறார். கனியில்லாத திராட்சக் கொடியாகவோ அல்லது கசப்புள்ள, புளிப்புள்ள கனிகளைத் தரும் திராட்சச்செடியாகவோ இருக்கக்கூடாது என்பதும், நல்ல கனி தரும் திராட்சச்செடியாய் இருக்கவேண்டும் என்பதுமே அவரது எதிர்பார்ப்பாய் இருக்கிறது.

ஆவியின் கனியே நல்ல கனி என்று அழைக்கப்படுகிறது. “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” (கலா. 5:22,23).

ஒரு கொடியானது செடியோடு ஒட்டப்பட்டிருக்கும்போது, செடிக்குள்ளிருந்து எல்லா சத்துக்களையும் பெற்றுக்கொள்ளுகிறது. அதுபோல, நீங்கள் கிறிஸ்துவுடன் இணைந்திருக்கும்போது அவருடைய குணாதிசயம், சுபாவம் எல்லாம் நிச்சயமாய் உங்களுக்குள்ளே இறங்கி கிறிஸ்துவினுடைய இனிமையை உங்களுக்குள் கொண்டுவந்துவிடும்.

தேவபிள்ளைகளே, ஆவியின் கனிகளை உங்களிலே காண்கிறவர்கள் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்ப்பார்கள்.

நினைவிற்கு:- “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்” (யோவா. 15:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.