Appam, Appam - Tamil

ஆகஸ்டு 27 – தனிமையாய்!

“பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை (யோவா. 8:29).

“என்னைத் தனியே இருக்கவிடவில்லை. ஒருபோதும் அவர் என்னைவிட்டு விலகவில்லை, ஒருபோதும்அவர் என்னைக் கைவிடவில்லை. எப்பொழுதும் அவரது பிரசன்னமும், சமுகமும், வல்லமையும், கிருபையும் என்னைத் தாங்குகிறது” ஏன்று சொல்லுவது எத்தனை பாக்கியமான அனுபவம்!

தனிமை எப்போதுமே வேதனையானது. அதிலும் தேவனற்ற தனிமை மிக மிக வேதனையும் ஆபத்துமானது. தனிமையிலே வாடுகிறவர்களைப் பலநேரங்களிலே சாத்தான் பயன்படுத்திக்கொள்ளுகிறான். சோம்பலையும், சோர்வையும், அதைரியத்தையும், அவிசுவாசத்தையும் கொண்டுவருகிறான். தனிமையில் வாடுகிறவர்களின் உள்ளம் சாத்தானின் தொழிற்கூடமாய் மாறிவிடுகிறது. கர்த்தர் உங்களுடைய தனிமையை மாற்றி, தமது மகிமையான பிரசன்னத்தால் உங்களை நிரப்ப விரும்புகிறார். உங்களுடைய வீட்டிலே இறங்கி உலாவ அவர் விரும்புகிறார்.

மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று கர்த்தர் கண்டு, ஏற்ற துணையை ஆதாமுக்குத் தந்தார் (ஆதி. 2:18). அதுபோலவே ஆவிக்குரிய ஜீவியத்திலே நீங்கள் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்பதால் விசுவாசிகளின் ஐக்கியத்தையும், சபை கூடுதலையும் ஏற்படுத்தியிருக்கிறார். ஆவியிலே நீங்கள் தனிமையாய் இருக்கக்கூடாது என்பதற்காக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், ஆவியானவருடைய நிறைவையும் தந்தருளுகிறார்.

அன்று ஏவாள் கணவனை விட்டுவிட்டு தனிமையாக ஏதேன் தோட்டத்திலே உலாவிக்கொண்டிருந்தபடியால், அந்தத் தனிமையை சாத்தான் பயன்படுத்தி அவளை வஞ்சித்து ஏமாற்றிவிட்டான். அதுபோலத்தான் எரிகோவை நோக்கி தனிமையாய் நடந்த வழிப்போக்கனை கள்ளர்கள் காயப்படுத்தி, குற்றுயிராய் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். தனிமை ஆபத்தானது.

கணவனோடு மிகுந்த சந்தோஷமாய் வாழ்ந்துவிட்டு, திடீரென்று கணவன் மரிக்க, விதவைக்கோலத்திலே ஒரு பெண் தனிமையாய் நிற்கும்போது அந்தப் பெண்ணின் துயரம் எவ்வளவு கொடிதானது! பிள்ளைகளைப் பிரிந்து வாழும் பெற்றோர், அவர்களுடைய நினைவும், ஏக்கமுமாய் இருக்கிறார்கள். கடலில் தனிமையாய் படகிலே செல்கிற ஒருவர் வழி தெரியாமல் அலைமோதும்போது தனிமையை எண்ணிப் புலம்புவார் அல்லவா? தாவீது ஒருநாள் தனிமையின் வேதனையிலே, பின்வருமாறு புலம்பினார், “நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்” (சங். 102:7).

நீங்களும் ஒருவேளை இப்படிப்பட்ட தனிமையின் பாதையில் சென்றுகொண்டிருக்கக்கூடும். இன்றைக்கு கர்த்தரைத் துணையாக அழையுங்கள். என்னை அனுப்பினவர் என்னோடேகூட இருக்கிறார். “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை” (யோவா. 8:29) என்று விசுவாச அறிக்கை செய்யுங்கள். எதைச் செய்தாலும் இது கர்த்தருக்குப் பிரியமானதாய் இருக்கிறதா, அவர் என்னில் மனம் மகிழ்வாரா என்பதை சிந்தித்து சீர்தூக்கிப்பாருங்கள்.

தேவபிள்ளைகளே, கர்த்தருக்குப் பிரியமானவைகளையே எப்பொழுதும் செய்ய உங்களை அர்ப்பணித்துக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை” (யாத். 13:22).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.