Appam, Appam - Tamil

செப்டம்பர் 23 – அன்புகூரும் இருதயம்!

“நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக (உபா. 6:5).

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பத்துக் கட்டளைகளைக் கொடுத்திருந்தாலும், கர்த்தரிடத்தில் அன்புகூருவதையே முதல் கட்டளையாக பிரதானமாக வைத்தார். நாம் கர்த்தரிடத்திலும் அன்புகூரவேண்டும். பிறனிடத்திலும் அன்பு கூரவேண்டும். ஆம், கிறிஸ்தவ மார்க்கமே அன்பின் மார்க்கம்தான். அது கர்த்தருடைய அன்பை ருசிக்கிற மார்க்கம் மட்டுமல்ல, அந்த அன்பை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிற மார்க்கம்.

நீங்கள் கர்த்தருடைய அன்பை பெற்றுக்கொண்டதோடு நின்றுவிடாதிருங்கள். கர்த்தர்மேல் அளவற்ற அன்பைச் செலுத்தி, அவரைக் கனப்படுத்துங்கள். அவரை உற்சாகமாய்த் துதித்து மகிழுங்கள். ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறதுபோல, கர்த்தருடைய இருதயம் உங்களுடைய அன்புக்காக ஏங்குகிறது.

“அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவா. 4:8). சிலர் அறியாமை காரணமாக அன்புதான் கடவுள் என்று சொல்லிவிடுவார்கள். அன்பு கடவுளாக முடியாது. அன்பு தேவனுடைய பிரதானமான குணாதிசயமே. கல்வாரியின் அன்பு தியாகமாய் உங்களைத் தேடி வந்தது. அந்த அன்பினால் சிலுவையின் வேதனையை சகித்து பாவ மன்னிப்பையும், விடுதலையையும், ஆசீர்வாதங்களையும் கர்த்தர் உங்களுக்குத் தரச் சித்தமானார். உங்களுக்காக கடைசி சொட்டு இரத்தத்தையும் ஊற்றிக் கொடுத்தவரிடத்தில், நீங்கள் அன்புகூராமலிருப்பது எப்படி?

எந்த கிறிஸ்தவனிடத்தில் தேவ அன்பு இல்லையோ, அவன் கிறிஸ்தவன் என்று அழைக்கப்படவே முடியாது. ஆகவேதான் அப். பவுல் அன்புக்கென்றே ஒரு முழு அத்தியாயத்தை எழுதினார் (1 கொரி. 13-ம் அதிகாரம்). “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்” (1 கொரி. 13:1) என்று அவர் எழுதியுள்ளார்.

சிலருக்கு ஆவியின் வரங்களையும், வல்லமைகளையும் கொடுத்து, கர்த்தர் பலத்த அற்புதங்களைச் செய்யும்போது, அவர்கள் பெருமையும் மனமேட்டிமையும் அடைந்து, ஆதி அன்பில் நிலைத்திராமல் விழுந்துபோகிறார்கள். கர்த்தரோ நம்முடைய முதல் அன்பையும், முழு அன்பையும் எதிர்பார்க்கிறார். ஆகவேதான் பேதுருவை நோக்கி, பேதுருவே, நீ என்னை நேசிக்கிறாயா, என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா, இவர்களைப்பார்க்கிலும் என்னிடத்தில் அதிகமாய் அன்புகூருகிறாயா என்று கேட்டார். கிறிஸ்துவை நாம் மனதார நேசிக்காமலும், அவரிடத்தில் அன்பு செலுத்தாமலும் இருப்பது எப்படி?

சுயநலமான அன்பை உதறித்தள்ளுங்கள். மாய்மாலமான அன்பு வேண்டவே வேண்டாம். கள்ளம் கபடமற்ற இருதயத்தோடு, கர்த்தரை நேசிக்கத் தீர்மானியுங்கள். வேதம் சொல்லுகிறது, “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக” (வெளி. 1:6).

நினைவிற்கு:- “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது” (1 யோவா. 4:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.