Appam, Appam - Tamil

அக்டோபர் 31 – மூலைக்கல்!

“இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும்” (ஏசா. 28:16).

உங்கள் அஸ்திபாரமானவராக கிறிஸ்து இருப்பாரானால், நீங்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. உங்கள் மூலைக்கல்லானவர் கிறிஸ்துவானால், நீங்கள் ஒருபோதும் திசை தப்பிப்போவதில்லை.

வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டிடங்களைப் பார்த்து நாம் ஆச்சரியப்பட்டு வியந்துபோகிறோம். ஆனால் அதனுடைய பெலனோ மறைந்து கிடக்கும் அதின் அஸ்திபாரத்தில் இருக்கிறது. பூத்துக்குலுங்கி கனிதரும் மரத்தை மேல்நோக்கிப் பார்த்து பூரிப்படைகிறோம். ஆனால் அந்தக் கனிகளின் இரகசியம் பூமியில் மறைந்து கிடக்கும் வேரில் இருக்கிறது. பிரகாசமாய் ஒளி கொடுக்கும் விளக்கை நாம் பார்த்து மகிழ்கிறோம். ஆனால், அந்த வெளிச்சத்தின் இரகசியம் விளக்கின் அடியிலுள்ள எண்ணெயில் இருக்கிறது.

தேவபிள்ளைகளே, உங்களது கிறிஸ்துவ வளர்ச்சி, இரட்சிப்பின் சந்தோஷமெல்லாம் கிறிஸ்துவாகிய அஸ்திபாரத்தில்தான் இருக்கிறது. உங்களை மேன்மைப்படுத்தி வளரச்செய்வதற்காக அவர் பரீட்சிக்கப்பட்டு, பாடுபட்டு சீயோனிலே திட அஸ்திபாரமான மூலைக்கல்லானார். கல்வாரியில் தம் விலையேறப்பெற்ற இரத்தத்தைச் சிந்தி இரட்சிப்புக்கு அடிக்கல்லானார்.

போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவையல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப்போட ஒருவனாலும் கூடாது (1 கொரி. 3:11). “தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது” (2 தீமோ. 2:19).

சீயோனிலே அஸ்திபாரமாய் நிற்கிற கிறிஸ்துவினுடைய பெயர்களில் ஒன்று “இஸ்ரவேலின் பரிசுத்தர்” என்பதாகும். இஸ்ரவேல் ஜனங்களையும், தன்னையும் இணைத்துக்கொண்டு அவர் இஸ்ரவேலின் பரிசுத்தர் என்று அழைக்கப்படுகிறார். அஸ்திபாரம் பரிசுத்தமாக இருந்தால்தான், கட்டடமும் பரிசுத்தமுள்ளதாய் இருக்கும். ஆகவே கட்டடம் முழுவதும் பரிசுத்தமாய் இருக்கும்படி உங்களை அவர் பரிசுத்தமாக்குகிற தேவனாகவும் இருக்கிறார்.

கர்த்தர் பரிசுத்தத்தில் பூரணமுள்ளவர். அவரிடத்தில் புடமிடும் பரிசுத்த அக்கினி இருக்கிறது (ஏசா. 10:17). அந்த பரிசுத்த அக்கினியினாலே அவர் பாவங்களையும், அசுத்தங்களையும், சாபங்களையும் சுட்டெரிக்கிறார். சத்துருவினுடைய வல்லமைகளை முறித்துப்போடுகிறார். தம்முடைய பிள்ளைகளை பரிசுத்தமாய் பாதுகாக்க வைராக்கியம் கொண்டிருக்கிறார்.

உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு அஸ்திபாரமாகவும், மூலைக்கல்லாகவும் விளங்குகிறார். கிறிஸ்துதாமே உங்கள் பரிசுத்தத்தின்மேல் அக்கறை உள்ளவராக பரிசுத்த வாழ்க்கைக்கு உங்களுக்குத் துணைநிற்கிறார். “யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன்” (ஏசா. 41:14).

தேவபிள்ளைகளே, அந்த பரிசுத்தரின் கரத்தைப் பிடித்துக்கொண்டு பரிசுத்தப் பாதையிலே உற்சாகமாய் நடந்து முன்னேறுங்கள். அவர் உங்களை பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தம் அடையச்செய்து பூரணராக்குவார்.

நினைவிற்கு:- “பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது” (மத். 7:25).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.