அக்டோபர் 30 – முதற்பலனாக!
“இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்” (வெளி. 14:4).
சீயோன் மலையிலே ஆட்டுக்குட்டியானவரோடு நிற்பது, பாக்கியத்திலும் பாக்கியம். இந்த பூமிக்குரிய வாழ்க்கை, அந்த மேன்மையான வாழ்க்கைக்கு ஆயத்தப்படுகிற ஒரு வாழ்க்கையாகும். அங்கே ஆட்டுக்குட்டியானவரோடு நிற்கத் தகுதிபெற்றவர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.
இவர்கள் மீட்கப்பட்டவர்கள். “மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்” (வெளி. 14:4). ஆம், கர்த்தர் உங்களை கல்வாரியிலே கிரயம் செலுத்தி தமக்கென்று சொந்தமாக்கிக்கொண்டார்.
ஆகவே நீங்கள் உங்களுடையவர்கள் அல்ல; எகிப்திலிருந்த இஸ்ரவேலரை பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம்மூலமாக மீட்டுக்கொண்டதைப்போல, உங்களையும் கல்வாரி இரத்தத்தினாலே கர்த்தர் மீட்டுக்கொண்டிருக்கிறார். ஆகவே உலக ஆசாபாசங்களிலிருந்தும், உலக சிநேகங்களிலிருந்தும், உலக வேஷங்களிலிருந்தும் வேறு பிரிக்கப்பட்டு பரிசுத்த வாழ்க்கை வாழும்படி உங்களை ஒப்புக்கொடுங்கள்.
அநேகர் மனுஷரைப் பிரியப்படுத்த நினைத்து கர்த்தரைத் துக்கப்படுத்திவிடுகிறார்கள். கர்த்தரைப் பின்பற்றுவதிலும், பிரியப்படுத்துவதிலும் உறவுமுறைகளோ, மாம்சீக அன்போ உங்களுக்குக் குறுக்கே நிற்கவேகூடாது. இயேசுகிறிஸ்து சொன்னார்: “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” (மத். 10:37) என்றார்.
தேவனால் மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள் வேறுபாட்டின் ஜீவியத்தின் அவசியத்தை அறிந்திருக்கவேண்டும். சிருஷ்டிப்பிலே, “வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது” (ஆதி. 1:4,6) என்று தேவன் சொன்னார்.
அதே வேறுபாட்டின் ஜீவியத்தை ஆபிரகாமின் வாழ்க்கையிலும் கர்த்தர் கொண்டுவந்தார். “கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” (ஆதி. 12:1) என்றார்.
பாருங்கள், முதலாவது, கர்த்தர் ஆபிரகாமை அவரது ஊரைவிட்டும், இனத்தாரைவிட்டும் பிரித்தார். இரண்டாவதாக, லோத்துவைவிட்டும், லோத்தின் குடும்பத்தாரைவிட்டும் வேறுபிரித்தார். மூன்றாவதாக, ஆகாரைவிட்டும், இஸ்மவேலைவிட்டும் வேறுபிரித்தார். நான்காவதாக, ஈசாக்கைவிட்டும், பிள்ளைப் பாசத்தைவிட்டும் வேறுபிரித்தார். தனக்கு அருமையான எல்லாவற்றையும் ஆபிரகாம் பலிபீடத்தின்மேல் கிடத்தவேண்டியதாயிற்று.
தேவபிள்ளைகளே, இந்த சத்தியத்தை நீங்கள் ஒருநாளும் மறந்து போகாதிருங்கள். கிரயத்திற்குக் கொள்ளப்பட்டவர்களாகிய நீங்கள் பரிசுத்த ஜீவியம் செய்யவேண்டும்.
நினைவிற்கு:- “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்” (வெளி. 21:3).