மே 31 – அணையில்லை!
“நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை” (ஏசா. 23:10).
ஏசாயா தீர்க்கதரிசி பல தேசங்களைக்குறித்து தீர்க்கதரிசனம் உரைத்துவிட்டு முடிவாக தர்ஷீசின் குமாரத்தியைப் பார்த்து நதியைப்போல உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை என்று சொல்லுகிறார்.
நாமே கர்த்தருடைய நதிகள், தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிற நதிகள். நமக்குள்ளிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புறப்பட்டுவரும். நதிகள் தேசத்துக்கே பெரிய ஆசீர்வாதமாக இருக்கின்றன.
நதியானது தண்ணீரை தேசத்தில் பாய விடாதபடி தடுத்து சிலர் அணை கட்டி தேக்கி வைத்துவிடுகிறார்கள். கர்த்தரோ நாம் தேங்கி நிற்பதில் பிரியப்படாமல் பாய்ந்து செல்லவேண்டும் என்றே விரும்புகிறார். தடைகளை தகர்த்துப்போடுகிறார். “நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை” என்று அன்போடு ஆசீர்வதிக்கிறார்.
ஒரு குடும்பத்தில் ஒரு சகோதரிக்கு கர்த்தர் சுகமளிக்கிற வரத்தையும், தீர்க்கதரிசன வரத்தையும் கொடுத்திருந்தார். நன்றாக ஜெபிக்கிற அவருக்கு எழும்பிப் பிரகாசிக்கவேண்டும் என்ற விருப்பம் அதிகமாயிருந்தது. ஆனால் அந்த சகோதரியின் மாமியாரோ அவர்களை ஊழியத்திற்கு செல்ல அனுமதிப்பதில்லை. குறைகூறியும், முறுமுறுத்தும் ஊழியத்தை தடை செய்துகொண்டேஇருந்தார்கள்.
கர்த்தர் ஒரு நாள் குறுக்கிட்டார். தடையை அகற்றி, ஊழியத்திலே அந்த சகோதரியைக் கொண்டுசெல்ல விரும்பினார். மாமியாருக்குள் கல்வாரி அன்பை கர்த்தர் ஊற்றினார். ஆத்தும பாரத்தைத் தந்தருளினார். சில நாட்களுக்குள்ளாகவே மாமியாரும் மருமகளும் சேர்ந்து ஊழியத்திலே இறங்கிவிட்டார்கள். இரட்டிப்பான ஆசீர்வாதம். வயதான மாமியாரின் ஆலோசனைகளும், சகோதரியின் ஆவியின் வரங்களும் ஊழியத்தில் மிகவும் பிரயோஜனமாய் அமைந்தன.
இன்று அணைகளைப்போல தடைகள் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதோ? எழும்பவேண்டிய அளவு எழும்பாமல், பிரகாசிக்கவேண்டிய அளவு பிரகாசிக்காமல் இருக்கிறீர்களோ? தடையாகிய அந்த அணையைக் கர்த்தர் மாற்ற விரும்புகிறார். வேதம் சொல்லுகிறது, “தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார். கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” (மீகா 2:13).
ஒரு பக்கத்தில் கர்த்தர் தடைகளைத் தகர்க்கிறவர். மறுபக்கத்தில் கோணலானவைகளைச் செவ்வையாக்குகிறவர். வனாந்தரத்திலே வழிகளையும், அவாந்தர வெளிகளிலே ஆறுகளையும் உண்டாக்குகிறவர். தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையிலே அணை குறுக்கிடுவதுபோல பெரிய தடைகளைக் காண்கிறீர்களோ? ஏதோ ஒரு வகையில் கட்டப்பட்டிருக்கிற நிலமையை உணருகிறீர்களோ? இன்றைக்கு கர்த்தர் பலத்த பராக்கிரமசாலியாக உங்களுக்காக எழுந்தருளுகிறார். உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலே ஒரு விடுதலையையும், ஊழியத்திலே ஒரு எழுச்சியையும், ஆத்தும ஆதாயத்திலே ஒரு வேகத்தையும் அவர் தந்தருள்வார்.
நினைவிற்கு:- “இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்” (செப். 3:15).