மே 13 – யூதாவின் சிங்கம்!
“இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்” (வெளி. 5:5).
வேதத்திலே, மூன்று கூட்டத்தார் சிங்கத்திற்கு ஒப்பானவர்களாக வர்ணிக்கப்படுவதைப் பார்க்கிறோம். முதலாவது யூதா கோத்திரத்து சிங்கமாகிய இயேசுகிறிஸ்து (வெளி. 5:5). இரண்டாவது நீதிமான்கள் (நீதி. 28:1). மூன்றாவது யாரை விழுங்கலாமோ என்று சுற்றித்திரிகிற பிசாசானவன் (1 பேது. 5:8).
பிசாசானவனை வேதம் சிங்கம்போல் என்று சொன்னாலும் அவன் சிங்கத்தைப்போல தைரியமுள்ளவன் அல்ல. வேதம் சொல்லுகிறது, “ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” (யாக். 4:7).
பிசாசு பயந்த சுபாவமுள்ளவன். ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டவன். கிறிஸ்து சிலுவையிலே அவனுடைய தலையை நசுக்கினார். அவனுடைய வல்லமை, அதிகாரம் எல்லாவற்றையும் பிடுங்கிவிட்டார். நீதிமான்கள் தைரியமாய் அவனை எதிர்த்து நின்று ஜெயம்பெறுவார்கள். அவன் பிரச்சனைகளைக் கொண்டுவரும்போது நாம் அவனை எதிர்த்து நிற்கவேண்டும். போராட்டங்கள் வரும்போதும், எதிர்ப்பு பெருகும்போதும் சோர்ந்துவிடக்கூடாது. ஆபத்துக்காலத்திலே நாம் சோர்ந்துவிடுவோமானால் நாம் பெலன் குன்றியவர்களாயிருப்போம்.
சிலர் பல்லி, கரப்பான் போன்றவற்றிற்குப் பயப்படுவார்கள். நீங்கள் சுண்டெலி அல்ல. சுண்டெலிதான் அங்குமிங்கும் பயந்து ஓடி ஒளிந்துகொள்ளும். நீங்கள் சிங்கங்கள். யூதா கோத்திரத்து இராஜா, சிங்காசனத்தில் உங்கள் அருகில் வீற்றிருக்கிறார்.
தைரியமும், ஊக்கமான ஜெபமும் உங்களை பலப்படுத்தக்கூடியவை. வியாதிகளிலேயே பெரிய வியாதி, பயம் என்கிற வியாதிதான். சிலர் தோல்வியான எதிர்மறையான வார்த்தைகளைப் பேசி நோயாளிகளை பயமுறுத்துவார்கள்.
இந்த நோய் வந்தால் நூற்றில் ஒருவர்தான் பிழைப்பார் என்றும், எனக்குத் தெரிந்த இருபது பேருக்கு இந்த நோய் வந்ததில் பத்தொன்பதுபேர் மரித்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். இதைக் கேட்கும் நோயாளி பயத்திலேயே மரித்துப்போய்விடுவார். ஆனால் நீதிமான்களோ, இப்படிப்பட்ட வார்த்தைகளுக்குப் பயப்படாமல் சிங்கத்தைப்போல தைரியமாய் இருப்பார்கள்.
பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை ஜனங்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். பேதுருவின் தைரியத்தின் இரகசியம் என்ன? அவர் இயேசுவோடு இருந்தவர் என்பதே.
சிங்கத்தோடு இருக்கிற குட்டிக்கும் சிங்கத்தைப்போல தைரியம் உண்டாகிவிடும். நாம் எவ்வளவுக்கெவ்வளவு கர்த்தருடைய பிரசன்னத்தில் இருக்கிறோமோ, எவ்வளவுக்கெவ்வளவு ஆவியினால் நிரப்பப்படுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தைரியமும் வல்லமையும் நம்மில் தங்கும். பேதுருவும் யோவானும் பெரிய வேதசாஸ்திரிகள் அல்ல. ஆனால் அவர்கள் பரிசேயர், சதுசேயர்முன் சுவிசேஷத்தை தைரியமாய் அறிவித்தார்கள். பெரிய எழுப்புதலை உண்டாக்கினார்கள். தேவபிள்ளைகளே, தைரியமாய் இருங்கள். கர்த்தர் உங்களோடு இருக்கிறார்.
நினைவிற்கு:- “நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்” (சங். 138:3).