Appam, Appam - Tamil

மே 12 – ஜெயங்கொள்ளும் தீர்மானம்!

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (2 கொரி. 2:14).

வெற்றியின்மேல் வெற்றிபெறவும், சோதனைகளின்மேல் ஜெயமெடுக்கவும் இன்றைக்குத் தீர்மானியுங்கள். வெற்றிக்கென்று உங்களை அர்ப்பணித்துவிடுங்கள். நீங்கள் எப்போதும் வெற்றிசிறக்க வேண்டுமென்று கர்த்தர் ஆவலுள்ளவராயிருக்கிறார்.

ஆகவே ‘நான் வாலாகாமல் தலையாவேன், கீழாகாமல் மேலாவேன் என்றும் “இயேசுகிறிஸ்துவினாலே எனக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி. 15:57) என்றும் விசுவாச அறிக்கை செய்யுங்கள்.

இயேசு கிறிஸ்துவுக்கு தோல்வியென்பது இல்லை. அவர் ஜெயக்கிறிஸ்து. இஸ்ரவேலரின் ஜெயகெம்பீரமானவர். இஸ்ரவேலின் சேனைகளுக்கு முன்பாக வெற்றிவேந்தனாய், கெம்பீரமுள்ளவராய் நடந்துசென்றவர். கானானிலுள்ள ஏழு ஜாதிகளையும் முறியடித்து, முப்பத்தியொரு இராஜாக்களின்மேல் இஸ்ரவேலருக்கு வெற்றியைக் கொடுத்த அவர், நிச்சயமாக உங்களுக்கும் வெற்றியைத் தருவார்.

நீங்கள் செய்யவேண்டிய ஒரு காரியமுண்டு. தோல்வியைக்குறித்த எந்த எண்ணத்திற்கும் இடங்கொடாதிருங்கள். எதிர்மறையான வார்த்தைகளைப் பேசாதிருங்கள். மனச்சோர்வை அகற்றிவிட்டு, கர்த்தருடைய உற்சாகமான ஆவியினால் நிரப்பப்படுங்கள். இன்றைக்கு கர்த்தர் எனக்கு ஒரு அற்புதத்தை செய்து, வெற்றியைத் தருவார் என்று உற்சாகமாய் விசுவாச அறிக்கை செய்யுங்கள்.

சிலர் எப்போதும் தோல்விக்குரிய வார்த்தைகளையே பேசி, “நான் ஏன்தான் பிறந்தேனோ? உயிரோடிருப்பதைவிட செத்துவிடுவது நல்லது. மற்றவர்களெல்லாம் உயர்ந்துபோகிறார்கள். நான்தான் தாழ்ந்துபோகிறேன். என் தலைவிதி அப்படி” என்று தொடர்ந்து சொல்லி கீழாகவே போய்க்கொண்டிருக்கிறார்கள். தேவபிள்ளைகளுடைய வாயிலே இப்படிப்பட்ட வார்த்தைகள் வரவேகூடாது.

நீங்கள் இராஜாதி இராஜாவின் பிள்ளைகளாயிருக்க, ஏன் அநாதைகளைப்போல உணரவேண்டும்? கர்த்தர் சிலுவையிலே உங்களுக்காக யாவையும் செய்து முடித்திருக்க, ஏன் தரித்திரத்தோடும், பெலவீனத்தோடும் வாழவேண்டும்? எப்பொழுதும், எல்லாவற்றிலும் உங்களை வெற்றிசிறக்கப்பண்ணுகிறவர் உங்களோடிருக்கிறார்.

போராட்ட நேரத்திலே எதிரிகள் துரத்துவதற்கு வந்தபோது, யோசபாத் வெற்றி வார்த்தைகளைப் பேசினார். காரணம், அவருடைய கண்களிலே தேவனைப்பற்றிய சரியான வெளிப்பாடு இருந்தது. “எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக்கூடாது” (2 நாளா. 20:6) என்று அவர் அறிக்கையிட்டார்.

தேவபிள்ளைகளே, சர்வவல்ல கர்த்தரை நீங்கள் பின்பற்றிக்கொண்டிருக்கிறீர்கள். அவரால் கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. இந்த உலகத்தில் உங்களுக்குப் போராட்டம் இருக்கலாம். கலங்காதிருங்கள். யுத்தம் கர்த்தருடையது. தோல்வி சாத்தானுடையது. உங்களுக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள்.

நினைவிற்கு:- “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” (சங். 23:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.