Appam, Appam - Tamil

மே 10 – ஜெயம் உங்களுக்கு!

“இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே (ரோம. 8:37).

தோல்வி என்ற வார்த்தை நம்முடைய உள்ளத்திற்கு துக்கத்தைக் கொண்டுவந்து துவண்டுப்போகச்செய்கிறது. ஆனால் வெற்றி என்ற வார்த்தை மகிழ்ந்து களிகூர்ந்து தேவனைத் துதிக்கச்செய்கிறது. கர்த்தர் நமக்கு அரைகுறை ஜெயத்தை வாக்குப்பண்ணாமல் பூரணமான ஜெயத்தை வாக்குப்பண்ணியிருக்கிறார். நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயம்கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம்.

நம்முடைய ஆண்டவராகிய ஜெயகிறிஸ்து ஒருபோதும் தோல்வியடைந்தவர் அல்ல. அவர் இஸ்ரவேலின் ஜெய கெம்பீரமானவர். ‘சேனைகளின் கர்த்தர்’ என்பது அவருடைய நாமம். அவர் சாத்தானின் தலையை நசுக்கி அவன்மேல் ஜெயம்கொண்டார். உலகம், மாம்சம், பிசாசை கல்வாரிச் சிலுவையிலே ஜெயம்கொண்டார். அவருடைய வாழ்க்கையெல்லாம் வெற்றி முழக்கமாயிருந்தது. அவர் ஜெயம்கொண்டு பிதாவின் சிங்காசனத்தை சுதந்தரித்துக்கொண்டார் (வெளி. 3:21).

கிராமங்களில் விளையாடப்படும் கபடி என்றாலும் சரி, பட்டணங்களில் விளையாடப்படும் கால்பந்தாட்டமானாலும் சரி, தேசிய அளவில் விளையாடப்படும் கிரிக்கெட்டானாலும் சரி, வெற்றி பெறுவதையே மக்கள் விரும்புகிறார்கள். நமது இந்திய அணி பாகிஸ்தானோடு கிரிக்கெட் விளையாடும்போது, ஜனங்கள் சாலைகளில் ஆங்காங்கே நின்று தொலைக்காட்சியில் நேரலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கவனித்திருக்கிறேன். இந்தியா வெற்றி பெறவேண்டும் என்பதிலே அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம்!

அதுபோல, கர்த்தரும் பரலோகத்திலிருந்து நம்முடைய வாழ்க்கையை கவனித்துக்கொண்டேயிருக்கிறார். உலகம், மாம்சம், பிசாசு நமக்கு விரோதமாய்ப் போராடும்போது, நாம் வெற்றி பெறுகிறோமா அல்லது சோதனைகளில் விழுந்து தோல்வியடைந்து, துவண்டுபோகிறோமா என்பதை கவனித்துப் பார்க்கிறார். அவர் ஜெயம்கொண்டவராய் இருக்கிறதுபோல, நீங்களும் ஜெயம்கொண்டவர்களாய் விளங்கவேண்டும் என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பு.

ஆகவே வெளிப்படுத்தின விசேஷத்திலுள்ள ஏழு சபைகளும் ஜெயம்கொள்ளும்படி ஆலோசனை கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். அங்கே ஒன்பதுமுறை ‘ஜெயம்கொள்ளுகிறவன் எவனோ’ என்னும் வார்த்தைகள் திரும்பத்திரும்ப வருகிறது. வேதத்தின் இறுதியில் “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்” (வெளி. 21:7) என்றார்.

பரலோகம், ஜெயம்கொண்ட பரிசுத்தவான்களால் நிரம்பியிருக்கிறது. பாவக்கண்ணியிலே சிக்கி, சோதனையிலே விழுந்து தோல்வியோடு நிற்கிற ஒருவரும் பரலோகத்தைச் சுதந்தரிக்கமுடியாது.

தேவபிள்ளைகளே, கடந்த கால வாழ்க்கையில் பல காரியங்களில் நீங்கள் தோல்வியடைந்திருந்தாலும், கர்த்தருடைய நாமத்தினால் மறுபடியும் எழுந்து நில்லுங்கள். ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்தினாலும், சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை ஜெயித்திடுங்கள். பிரதிஷ்டை ஜீவியமும், ஆவிக்குரிய தீர்மானங்களும், ஊக்கமான ஜெபமும் உங்களை நிச்சயமாகவே ஜெயத்தின் பாதையிலே வழிநடத்தும்.

நினைவிற்கு:- “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி. 15:57).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.