Appam, Appam - Tamil

மே 30 – சகாயம் உண்டு!

“ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு (ஓசி. 13:9).

வேதத்திலே சிறிய தீர்க்கதரிசிகளில் ஒருவரான ஓசியா பதினான்கு அதிகாரங்களை எழுதியிருக்கிறார். விசேஷமாக அவர் நேரடியாக இஸ்ரவேலே, யூதாவே, எப்பிராயீமே என்று அழைத்து, கர்த்தருடைய வார்த்தையை உரைக்கிறதைப் பார்க்கலாம். ஓசியாவில் வருகிற தேவனுடைய பிரதான செய்தி “கர்த்தரண்டைத் திரும்புங்கள். அவரிடத்தில் உங்களுக்கு சகாயம் உண்டு” என்பதே.

கர்த்தரைவிட்டு தூரமாய்ப் போகும்போது பல தீவினைகளும், சாபங்களும், வறுமையும் வேதனையும் பின்தொடருகின்றன. ஆனால் மனந்திருந்தியவர்களாய் தேவசமுகத்திற்கு கண்ணீரோடு வரும்போது கர்த்தரிடத்தில் எப்போதும் நமக்கு சகாயம் உண்டு. ‘சீர்கெட்டப் பிள்ளையே என்னண்டைத் திரும்பு’ என்று அவர் அழைக்கிறார். வேதம் சொல்லுகிறது, “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்” (ஓசி. 14:1). “இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு” (ஓசி. 13:9).

ஒன்றை திட்டமாய் அறிந்துகொள்ளுங்கள். எந்த நிலைமையிலிருந்தாலும் நாம் கர்த்தரண்டை திரும்பும்போது, அவருடைய அன்பின் கரங்கள் நம்மை அரவணைக்க ஆவல்கொண்டதாய் இருக்கின்றன. தன்னண்டை வருகிற ஒருவனையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. வேதம் சொல்லுகிறது, “எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” (யோவா. 1:9).

‘சகாயம் உண்டு’ என்பதைப் புதிய ஏற்பாட்டிலே கர்த்தர் ஒரு அருமையான உவமையின்மூலமாக வெளிப்படுத்தச் சித்தமானார். அதுதான் கெட்ட குமாரனின் சரித்திரம். அவன் வேசிகளிடத்தில் தன் ஆஸ்தியை அழித்துவிட்டு எங்கே செல்வது என்று அறியாமல் பன்றிகளின் மத்தியிலே பன்றியைப்போல வாழ்ந்து பன்றிகளுக்குரிய தவிட்டினால் தன் வயிற்றை நிரப்பும் நிலைக்கு ஆளானான். பாவம் எத்தனை ஆழமான சீரழிவிற்குள் வழி நடத்திவிடுகிறது!

ஆனால் ஒருநாள் அவன் சிந்திக்கலானான். ‘நான் தகப்பனண்டை திரும்பினால் நிச்சயமாகவே எனக்கு சகாயம் உண்டு. என் தகப்பன் வீட்டில் வேலைக்காரர்கள்கூட எவ்வளவு திருப்தியாய் புசித்து சந்தோஷமாயிருக்கிறார்கள். ஆகவே நான் எழுந்து என் தகப்பனிடத்திற்கு போய், தகப்பனே உமக்கு விரோதமாகவும் பரத்துக்கு விரோதமாகவும் பாவஞ்செய்தேன். என்னை உம்முடைய குமாரன் என்று அழைக்கக்கூட நான் பாத்திரனல்ல என்று சொல்லுவேன்’ என்று கண்ணீரோடு புறப்பட்டு வந்தான்.

சகாயம் செய்ய துடிப்புள்ள தகப்பன் தன் மகனைக் கண்டதும் ஆவலுடன் எதிர்கொண்டு ஓடினான். அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்தான், கைகளுக்கு மோதிரமிட்டான், புதிய வஸ்திரத்தை தரிப்பிக்கச்செய்தான், கொழுத்த கன்றை அடிப்பித்தான், நடன விருந்தை ஏற்படுத்தினான். இதெல்லாம் சகாயங்கள்தான். அவனை அவர் மறுபடியும் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொண்டதுதான் சகாயங்களிலேயே மேன்மையான சகாயம்.

தேவபிள்ளைகளே, எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும் உங்களை வெறுக்காதவர், உங்களை தப்புவிப்பவர் இயேசு ஒருவரே. அவரிடத்தில் திரும்புங்கள். திரளான சகாயம் உங்களுக்கு காத்திருக்கிறது.

நினைவிற்கு:- “இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்” (சங். 54:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.