ஆகஸ்டு 03 – முகமுகமாய்க் கண்டேன்!
“நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்” (ஆதி. 32:30).
யாக்கோபுடைய உள்ளத்திலே, “தேவனுடைய முகத்தைப் பார்ப்பவர்கள் உயிர்தப்பிப் பிழைக்கமுடியாமல் செத்துப்போவார்கள்” என்ற எண்ணம் இருந்தது. பழைய ஏற்பாட்டில் அநேக பரிசுத்தவான்கள் அப்படித்தான் எண்ணினார்கள். அவர் பட்சிக்கிற அக்கினி என்றும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர் என்றும் பலரும் எண்ணினார்கள்.
ஒரு பக்கம் அவர் பட்சிக்கிற அக்கினியாயும், எரிச்சல் உள்ள தேவனாயும் இருந்தாலும்கூட, மறுபக்கத்திலோ அவர் மகா அன்பும் மனதுருக்கமுமுள்ளவர். மோசேயோடு பேசும்போது, “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” (யாத். 33:11) என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பல குடும்பங்களிலும் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளிடம் அன்புடனும் சாந்தத்துடனும் பழகுவதை நான் பார்த்திருக்கிறேன். பிள்ளைகள் தவறிழைக்கும்போதுகூட லேசான கண்டிப்பைமட்டுமே காட்டி அவர்களை நேர்வழிப்படுத்துவார்கள். பிள்ளைகளுடைய கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் அவர்கள், பிள்ளைகளுக்காக எதையும் செய்ய ஆயத்தமாயிருக்கிறார்கள் என்பதை அவர்களது முகங்கள் பிரபலித்துக்கொண்டேயிருக்கும். அதுபோல ஆண்டவருடைய முகமும் கிருபை உள்ளதாய் இருக்கிறது.
கர்த்தருடைய முகத்தில் முதலாவதாக, தேவபிரசன்னம் இருக்கிறது. அந்தப் பிரசன்னத்திலிருந்து சமாதானம் இறங்கி வருகிறது. ஒவ்வொருமுறையும் போதகர்கள் சபையாரை ஆசீர்வதிக்கும்போது, கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் (எண். 6:26) என்று சொல்லுகிறார்கள்.
கர்த்தருடைய முகப்பிரசன்னம் தருகிற சமாதானம் மகா மேன்மையானதாகும். அது உலகம் கொடுக்கவும் எடுக்கவும் கூடிய சமாதானம் அல்ல. எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம். அவருடைய முகப்பிரசன்னத்தால் உள்ளத்திலே மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகிறது.
இரண்டாவதாக, அவருடைய முகத்திலிருந்து அளவற்ற கிருபையின் ஐசுவரியத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம். “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்” (எண். 6:25). பாருங்கள் கர்த்தருடைய முகத்திலிருந்து ஒரு பிரகாசம் வருகிறது. அந்தப் பிரகாசம் இனிமையான கிருபையாக மாறுகிறது. ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது என்று சொல்லி சங்கீதக்காரனாகிய தாவீது கர்த்தரைத் துதித்தார்.
கர்த்தருடைய முகத்தைத் தரிசிக்கும் வழியை தாவீது அழகாய் சொல்லித்தருகிறார். “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்” (சங். 17:15). தேவபிள்ளைகளே, அன்புள்ள தகப்பனுடைய முகத்தை பிள்ளைகள் வாஞ்சிப்பதுபோல, கர்த்தருடைய முகத்தை வாஞ்சியுங்கள். “உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்” என்று சொல்லி ஜெபியுங்கள் (சங். 119:135). அவருடைய முகத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று” (சங். 27:8).