Appam, Appam - Tamil

மே 29 – அனுப்பப்பட்டு வந்தேன்!

“பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன் (தானி. 10:11).

‘நான் அனுப்பப்பட்டு வந்தேன்’ என்று அந்த தேவதூதன் தானியேலுக்கு தேவனுடைய தூதைக் கொண்டுவந்ததுடன், தானியேலைப் பெலப்படுத்தி திடப்படுத்தும்படியாகவும் வந்தான்.

தேவ தூதர்கள் யார்? அவர்கள் தேவனுடைய இரதங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது (சங். 68:17). குதிரைகள் பூட்டிய இரதங்களை இராஜா அனுப்புவதுபோல தன்னுடைய செய்தியைச் சுமந்து செல்லும்படி இரதங்களைப்போல அவர்களைத் தேவன் அனுப்புகிறார். தேவனுடைய தூதை, இரதங்களைப்போல அங்குமிங்கும் கொண்டுசெல்லுவது தேவர்களுக்கு மன மகிழ்ச்சியாயிருந்தது.

தேவ தூதர்களுக்கு மூன்று முக்கியமான பணிகள் உண்டு. முதலாவதாக, தேவனுடைய செய்தியை தம்முடைய பிள்ளைகளுக்கு சுமந்து வருகிற தூதுப் பணி. இரண்டாவதாக, தேவனுடைய பிள்ளைகளுக்காக யுத்தம்செய்து சத்துருவை முறியடிக்கும் பணி. மூன்றாவதாக, கர்த்தரை ஆராதித்து மனம் மகிழுகிற பணி. மற்ற நேரங்களிலெல்லாம் அவர்கள் தேவனுக்குமுன்பாக நின்று அவரைத் தொழுதுகொள்ளுகிறார்கள். அவரிலே மன மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவருடைய சத்தத்தைக் கேட்டு அதன்படி செய்கிறார்கள்.

லூக்கா 1:19 லே, கர்த்தரால் அனுப்பப்பட்ட காபிரியேல் என்ற தேவ தூதன் வயதான சகரியாவினிடத்திற்கு வந்தான். பின்பு மரியாளிடத்திற்கு வந்தபோது எப்படி அவள் மேசியாவைக் கொண்டுவரப்போகிறாள் என்பதைத் தெரிவித்தான். அதே தேவதூதர்கள் இரட்சிப்பை சுதந்தரித்துக்கொள்ளப்போகிற ஒவ்வொருவருக்கும் பரலோகச் செய்தியைக் கொண்டுவருகிறார்கள்.

ஒரு சிறு கிராமத்தில் ஆலய பிரதிஷ்டை செய்யும்போது, அங்கே உட்புறத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான சிறு சிறு மின் விளக்குகளைப் போட்டிருந்தார்கள். அங்கு ஆராதனை முடிகிற நேரம் வரும்பொழுது திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு ஆலயத்திலுள்ள அத்தனைபேரையும் மின்சாரம் பற்றிக்கொண்டது. அவர்கள் அனைவரும் மரணத்தின் எல்லைக்கு வந்துவிட்டதை உணர்ந்தார்கள்.

ஆனால் கர்த்தரோ தமது தேவ தூதனை அனுப்பச்சித்தமானார். அவன் நேராக இறங்கிவந்து சட்டென மின்சார இணைப்பைத் துண்டித்து அனைவரையும் காப்பாற்றிவிட்டான். அவன் நிச்சயமாகவே சாதாரண மனிதனாக இருந்திருக்கமுடியாது. காரணம், எந்த சாதாரண மனுஷனாயிருந்தால் அந்த மின்சாரம் அவனையும் எரித்திருக்கும்.

“நான் அனுப்பப்பட்டு வந்தேன்” என்று அந்த தேவதூதன் சொல்லும்போது அனுப்புகிற தேவனுடைய அன்பை நாம் எண்ணி அகமகிழ்கிறோம். பரலோக குடும்பத்தில் அங்கத்தினராக இருக்கிற பாக்கியத்தை எண்ணிப் பூரிக்கிறோம்.

“இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்திற்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு” என்று அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுகிறார் (எபே. 3:14,15).

நினைவிற்கு:- “அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி, பிரியமான புருஷனே, பயப்படாதே, …. திடங்கொள், திடங்கொள் என்றான்” (தானி. 10:18,19).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.