மே 24 – தப்புவிப்பார், விடுவிப்பார்!
“நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்” (தானி. 3:17).
கர்த்தர் நம்மை வழிநடத்துவதுடன், தப்புவிக்கவும், விடுவிக்கவும் செய்கிறார். அது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் விசுவாச அறிக்கையாக மட்டுமல்லாமல், உறுதியான சாட்சியாகவும் அமைந்தது. ஒரு பக்கம் இராஜாவினுடைய கோபத்திற்கு தப்புவித்தார். மறுபக்கம் பலவான்களையும் பட்சிக்கத்தக்க கொடூரமான அக்கினிச்சூளையிலிருந்தும் விடுவித்தார்.
இன்று கர்த்தர் உங்களை எதிலிருந்து விடுதலையாக்கவேண்டும்? கொடிய கடன் பிரச்சனையிலிருந்தா? நிந்தை அவமானங்களிலிருந்தா? வியாதிப்படுக்கையிலிருந்தா? கொடூரமானவர்களின் சீற்றங்களிலிருந்தா? தலைமுறை தலைமுறையாய் வரும் சாபங்களிலிருந்தா? எதிலிருந்து உங்களுக்கு விடுதலைவேண்டும்? எதுவாயிருந்தாலும் கர்த்தர் விடுதலை தர வல்லவராயிருக்கிறார். அவர் உங்களை விடுவித்து தப்புவிப்பார்!
“குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36). “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவா. 8:32). “கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” (2 கொரி. 3:17) என்று வேதம் சொல்லுகிறது.
தரித்திரத்திலிருந்து விடுதலைவேண்டுமா? கீழ்க்கண்ட வசனத்தை வாசித்து விசுவாச அறிக்கை செய்யுங்கள். “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே” (2 கொரி. 8:9).
நோயிலிருந்து விடுதலைவேண்டுமா? தொடரும் வார்த்தைகளை விசுவாச அறிக்கையாக திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். மெய்யாகவே அவர் என்னுடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நோய்களையெல்லாம் சுமந்தாரே. அவருடைய தழும்புகளால் நிச்சயமாகவே சுகமாவேன் (மத். 8:17, ஏசா. 53:5, 1 பேது. 2:24).
சாபத்திலிருந்து விடுதலை வேண்டுமா? உபா. 23:5; கலா. 3:13; வெளி. 22:3 ஆகிய வசனங்களை விசுவாச அறிக்கையாகச் செய்யுங்கள். கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் எல்லா சாபங்களுக்கும் நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்ததினால் அந்த சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றச்சித்தமானார். பாவ வாழ்க்கையிலிருந்து உங்களுக்கு விடுதலைவேண்டுமா? கல்வாரி சிலுவையை நோக்கிப்பாருங்கள். நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார் (1 பேது. 2:24) என்று வேதம் சொல்லுகிறது.
‘தேவனே என் துணிகரமான பாவங்களினால் நான் உம்மை துக்கப்படுத்திவிட்டேனோ? என் அக்கிரமங்கள் அல்லவா, ஆணிகளாய் மாறி உம்முடைய சரீரத்தை துளைத்தன? என் துணிகரமான பாவங்கள் அல்லவா சவுக்காய் மாறி உம்மை வேதனைப்படுத்தியது? என் பாவத்தை மன்னித்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும் தாரும்’ என்று கண்ணீரோடு கேளுங்கள். தேவபிள்ளைகளே, அவர் பாவ பழக்கவழக்கங்களிலிருந்து உங்களை நிச்சயம் விடுவித்து தப்புவிப்பார்!
நினைவிற்கு:- “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:9).