மே 19 – நடத்துவார்!
“கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்” (ஏசா. 58:11).
எத்தனை புயல் வீசினாலும், எத்தனை பிரச்சனைகள், போராட்டங்கள் வந்தாலும் கர்த்தர் உங்களை வழிநடத்துவார். தினந்தோறும் நடத்துவார். அன்பாக அருமையாக நடத்துவார். “மகா வறட்சியான காலங்களிலும் உங்களை நடத்துவேன்” என்று அவர் வாக்குப்பண்ணுகிறார்.
உங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டதாலோ, கடன் பிரச்சனை வாட்டுவதாலோ, இனி என்ன செய்வேன் என்று எதிர்காலத்தைக்குறித்து நடுங்குகிறீர்களோ? உங்களுடைய கரத்தை கர்த்தருடைய கரத்தில் கொடுத்துவிடுங்கள். அவர் நிச்சயமாகவே நடத்துவார்.
கர்த்தருடைய வழிகளெல்லாம் ஆச்சரியமானவைகள். அவர் ஆராய்ந்துமுடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்து உங்களை வழிநடத்துவார். வனாந்திரத்திலே வழிகளையும், அவாந்தரவெளிகளில் ஆறுகளையும் உண்டாக்கி அற்புதமாய் அவர் உங்களை வழிநடத்திச்செல்வார்.
என்னுடைய தகப்பனாருக்கு ஒரு நண்பர் உண்டு. அவரைப்பற்றி அடிக்கடி என் தகப்பனார் சொல்லக்கேட்டிருக்கிறேன். அவரிடத்தில் எந்தப் பிரச்சனையைச் சொன்னாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ‘கவலைப்படாதீர்கள், கர்த்தர் நடத்துவார். மரத்தை நட்டவன் நிச்சயமாய் தண்ணீர் ஊற்றுவான் என்று சொல்லுவதுபோல உங்களை உருவாக்கினவர், தெரிந்துகொண்டவர் நிச்சயமாகவே நடத்துவார்’ என்று சொல்லுவார்.
தொடர்ந்து அவரிடத்தில் பிரச்சனையை அழுத்தத்துடன் சொன்னாலும், ‘ஆயிரம் ஸ்தோத்திரம் போடுங்கள் பிரதர். பிரச்சனை நீங்கிப்போகும். கர்த்தர் நடத்துவார்’ என்பாராம். அந்த நண்பருக்கு திடீரென்று ஏற்பட்ட கொடிய புற்றுநோயைக்கூட கர்த்தர் குணமாக்கி அவரது ஆயுளில் மேலும் பதினைந்து ஆண்டுகளை நீட்டித்துக் கொடுத்தார். அவருடைய வாழ்க்கையில் கர்த்தர் அவரை அற்புதமாய் வழிநடத்தினதை அறிந்து என் தகப்பனார் தேவனை ஸ்தோத்திரிப்பதுண்டு.
இன்னுமொரு உதாரணத்தைப் பாருங்கள். சுவரிலே தொங்கிக்கொண்டிருந்த ஒரு கடிகாரத்தின் பெண்டுலம் ‘ஒரு வினாடிக்கு ஒருமுறை நான் அங்குமிங்கும் அசைந்து ஆட வேண்டியிருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு அறுபதுமுறை, ஒரு மணி நேரத்திற்கு 3,600முறை, ஒரு நாளைக்கு 86,400 முறை அசையவேண்டுமே, அப்படியானால், ஒரு மாதத்திற்கு, ஒரு வருடத்திற்கு’ எனக் கணக்கிட்டு ஏக்கப் பெருமூச்சுவிட்டு சோர்ந்துபோனது.
அப்போது மேலேயிருந்த கடிகார முள் இந்த பெண்டுலத்தின் சோர்வையும் தளர்ச்சியையும் கண்டு, ‘நண்பா, நீண்ட காலத்தைக்குறித்து கவலைப்பட்டுக் கலங்காதே. ஒரு வினாடிக்கு ஒரே ஒரு முறைதானே நீ அசைகிறாய். கடவுள் அதற்குத் தேவையான பெலன் தந்து உன்னை நடத்துவார்’ என்று ஆறுதல்படுத்தியதாம்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய ஒவ்வொரு காலடியையும் கர்த்தர் வழிநடத்துகிறவராயிருக்கிறார். நாளையைப்பற்றிக் கவலைப்படாதிருங்கள். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். வறட்சியான காலங்கள் வந்தாலும் கர்த்தர் புல்லுள்ள இடங்களுக்கு உங்களை நடத்திச்செல்லுவார். அமர்ந்த தண்ணீர்களண்டையில் நடத்துவார்.
நினைவிற்கு:- “உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக” (சங். 143:10).