Appam, Appam - Tamil

ஜூலை 18 – ராஜகிரீடம்!

“ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்குமுன்பாக அழைத்துவரவேண்டும் (எஸ்தர் 1:10).

வேதத்தில் நமது இந்திய தேசத்தைக் குறிப்பிடும் ஒரே வசனம் எஸ்தர் 1:1 மட்டுமே. தமிழில் இந்து தேசம் என்றும், ஆங்கிலத்தில் இந்தியா என்றும் இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற தேசங்களின் பெயர்கள் வேதத்தில் இடம்பெறவில்லை.

இந்தியாவின் பெயரைக் கர்த்தர் வேதத்தில் எழுதி வைத்தது நமக்குப் பெரிய சந்தோஷம் அல்லவா? மட்டுமல்லாமல் தம்முடைய பன்னிரெண்டு சீஷர்களில் ஒருவரான தோமா அப்போஸ்தலனை இந்தியாவுக்கு அதுவும் தமிழ்நாட்டுக்கு அனுப்பி, அங்கே அவர் ஊழியம் செய்து இரத்தம் சிந்தினது தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெரிய பாக்கியம் அல்லவா?

அகாஸ்வேரு என்ற ராஜா பெரிய விருந்து வைத்து, அந்த விருந்திற்கு தன் மனைவியாகிய வஸ்தியை ராஜ கிரீடம் தரிக்கப்பட்டவளாக வரவேண்டுமென்று அழைக்க, அவளோ, மறுத்துவிடுவதை எஸ்தரின் சரித்திரத்தில் பார்க்கிறோம்.

இன்றைக்கு ராஜாதி ராஜாவாகிய இயேசுகிறிஸ்து, நமக்கு ஆன்மீக அழகையும், சௌந்தரியத்தையும் கொடுத்து, ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்திற்கு அழைக்கிறார். அவர் விரும்பும் அலங்கரிப்பு புறம்பான அலங்கரிப்பு அல்ல. உள்ளான அலங்கரிப்பு. தேவன் விரும்புகிற முதல் அலங்காரம் பரிசுத்தம்தான். ஆகவே பரிசுத்த அலங்காரத்துடன் நாம் தேவனைத் தொழுதுகொள்ளவேண்டும். தேவனுடைய ஆலயத்திற்கு வரும்போது அவர் நமக்குக் கொடுத்த இரட்சிப்பின் வஸ்திரம், நீதியின் சால்வை, சித்திரத் தையலாடையோடு வரவேண்டும்.

இரண்டாவதாக, தேவனுடைய பிள்ளைகளுக்கு உள்ள அலங்காரம் அர்ப்பணிப்பின் வாழ்க்கையாகும். வேதம் சொல்லுகிறது, “உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்” (சங். 45:10,11). இதில் தகப்பன் வீடு என்று சொல்லப்படுவது ஆதி தகப்பனாகிய ஆதாமின் கீழ்ப்படியாமையையும் ஆதாமின் சுபாவங்களையுமே. ஆகவேதான் கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” (ஆதி. 12:1) என்று சொன்னார்.

மூன்றாவதாக, தேவனுடைய பிள்ளைகளின் அலங்காரம் என்ன? “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது” (1பேது 3:3,4).

கர்த்தர் உங்களுக்கு அலங்காரத்தை மட்டுமல்ல, கிரீடங்களையும் தந்திருக்கிறார். கிரீடங்கள் என்று இங்கு சொல்லப்படுவது கர்த்தர் கொடுத்திருக்கிற அபிஷேகம், ஆளுகை, அதிகாரங்கள், வல்லமை ஆகியவற்றையே. நல்ல போராட்டத்தைப் போராடி ஓட்டத்தை முடிக்கும்போது, கர்த்தர் நீதியின் கிரீடங்களை உங்களுக்குத் தந்தருளுவார் (2 தீமோ. 4:7,8).

நினைவிற்கு:- “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான் (யாக். 1:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.