Appam, Appam - Tamil

ஜூலை 01 – கர்த்தருடைய சத்தம்!

“இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள் (சங். 95:8).

கர்த்தர் உங்களோடு பேசவேண்டுமென்று விரும்புகிறார். உங்களை உயிர்ப்பிக்கவேண்டுமென்று விரும்புகிறார். உங்களை வழிநடத்தவேண்டுமென்று விரும்புகிறார். ஆகவே, கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியுங்கள்.

வேதபுத்தகத்திலே, 29-ம் சங்கீதமானது கர்த்தருடைய சத்தத்திற்கென்று எழுதப்பட்ட ஒரு விசேஷ அதிகாரமாய் இருக்கிறது. அங்கே “கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது. கர்த்தருடைய சத்தம் கேதுரு மரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்” (சங். 29:3-5) என்று எழுதப்பட்டிருக்கிறது.

கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க ஆயத்தமாயிருங்கள். பகலின் குளிர்ச்சியான வேளையிலே ஆதாமும் ஏவாளும் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டார்கள் (ஆதி. 3:8). அதிகாலை மூன்று மணி முதல் நான்கு மணி வரைதான் குளிர்ச்சியான வேளை என்று விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். “அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்” (நீதி. 8:17) என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார்.

உலக சத்தங்கள் காதிலே தொனிப்பதற்கு முன்பாகவே, கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க அதிகாலையில் எழுந்திருங்கள். ஆண்டவருடைய இருதயத்தைக் குளிரப்பண்ணும்படி கர்த்தரைத் துதித்து ஆராதியுங்கள். எலிசா தீர்க்கதரிசி கர்த்தருடைய சத்தத்தை ஜனங்களுக்கு கொண்டுவருவதற்காக முதலாவது தேவ பிரசன்னத்திற்கு ஏங்கினார். ஒரு சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது, கர்த்தருடைய இனிமையான பிரசன்னம் இறங்கி வந்தது என்றும், தீர்க்கதரிசன அபிஷேகம் இறங்கி வந்தது என்றும், அப்பொழுது அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார் (2 இரா. 3:15) என்றும் வேதத்தில் காண்கிறோம்.

வேதத்திலே பிலேயாம் என்ற ஒரு தீர்க்கதரிசியைக்குறித்து வாசிக்கிறோம். அவர் கர்த்தர் தன்னிடத்தில் பேசும்படி, தேவ சத்தத்தைக் கேட்டு தீர்க்கதரிசனம் உரைக்கும்படி ஏழு பலிபீடங்களைக் கட்டி கர்த்தருக்கென்று பலியிட்டு, கர்த்தருடைய சத்தத்திற்குக் காத்திருந்தார் (எண். 23:1,2).

இன்றைக்கு கர்த்தர் விரும்புகிற பலி நொறுங்குண்ட ஆவிதான் (சங். 51:17). கர்த்தர் விரும்பும் பலி உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியே. நீங்கள் நருங்குண்ட இருதயத்தோடு ஸ்தோத்திரபலியை ஏறெடுக்கும்போது தேவபிரசன்னம் உங்களை சூழ்ந்துகொள்ளும். கர்த்தருடைய மெல்லிய சத்தம் உங்களுடைய ஆவியிலே தொனிக்கும். ஆயிரக்கணக்கான உலக சத்தங்களின் மத்தியிலே, ‘இது என் நேசரின் சத்தம்’ என்று உணர்ந்துகொள்ளும்படி உங்கள் ஆத்துமாவிலே விழிப்புணர்ச்சியைத் தந்தருளுவார்.

தேவபிள்ளைகளே, உங்களோடு பேசி மகிழ தேவகுமாரன் இறங்கி வருகிறார். பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மெல்லிய குரலில் உங்களோடு பேச விரும்புகிறார். அந்த பாசம் மிகுந்த குரலுக்காக எப்பொழுதும் உங்கள் உள்ளத்தைத் திறந்து வையுங்கள்.

நினைவிற்கு:- “நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்” (உன். 5:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.