Appam, Appam - Tamil

ஜூன் 22 – தேவனுடைய பண்ணை!

“நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள் (1 கொரி. 3:9).

கிறிஸ்தவ மார்க்கத்தினருக்கு இருக்கவேண்டிய மகா முக்கியமான இரண்டு அறிவுகள் உண்டு. முதலாவது, நம்முடைய தேவன் யார் என்ற தேவனைப்பற்றிய அறிவு. இரண்டாவது, கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்ற நம்மைப்பற்றிய அறிவு. இந்த இரண்டு அறிவுகளும் நாம் கர்த்தருக்குள் முன்னேறிச்செல்வதற்கும், ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கும், வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்கும் நமக்கு மிகவும் பிரயோஜனமாய் அமைகின்றன.

கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்று வேதம் சொல்லுகிறது? நாம் உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறோம் (மத். 5:14). நாம் உலகத்திற்கு உப்பாய் இருக்கிறோம் (மத். 5:13). தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் (யோவா. 1:12). இன்றைய துவக்க வசனத்திலே நாம் தேவனுடைய பண்ணையாய் இருப்பதுடன், தேவனுடைய மாளிகையாயும் இருக்கிறோம் என்று அப். பவுல் சொல்லுகிறார்.

பண்ணை என்ற வார்த்தை கிராமங்களிலே அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகும். நிலபுலன்கள், ஆடு மாடுகள், வேலையாட்கள் ஆகிய வசதிகளைக்கொண்டிருக்கிற மனிதனைப் பண்ணையார் என்று நாம் அழைக்கிறோம். அப்படியானால், நாம் தேவனுடைய பண்ணையாய் இருக்கும்போது அங்கே நமக்கு வேலைகள் உண்டு, உத்தரவாதங்கள் உண்டு, கர்த்தரோடு நிற்கிறோம் என்கிற மனமகிழ்ச்சியும் உண்டு.

பழைய ஏற்பாட்டிலே கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை தனது பண்ணையாக தெரிந்துகொண்டார். ஆனால் அவர்கள் கர்த்தரைவிட்டு விலகிப் போனபோது ஏசாயா தீர்க்கதரிசி துக்கத்தோடு, “சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும், வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும், முற்றிக்கைப் போடப்பட்ட ஒரு பட்டணம்போலவும் மீந்திருக்கிறாள்” என்று சொல்லுகிறார் (ஏசா. 1:8).

காரணம் என்ன? கர்த்தருடைய பண்ணையிலே ஒருமனமும், ஒற்றுமையும் இல்லை. ஆகவே சத்துரு அந்தப் பண்ணையை வீணாக்கி, நாசமாக்கிப்போட்டான். அருமையான திராட்சத்தோட்டம் இருக்கவேண்டிய இடத்திலே முள்ளும், குருக்கும் களைகளும் வளர்ந்து பண்ணையைக் கெடுத்துவிட்டன.

கிறிஸ்துவுக்குள் நாம் அனைவரும் ஒரே குடும்பமும், ஒரே பண்ணையுமாயிருக்கிறோம். கர்த்தரோடு இணைந்து வேலை செய்கிறவர்கள் இந்தப் பண்ணையிலே பெருமைப்படவோ, நான் பெரியவன் நீ பெரியவன் என்று சண்டையிட்டுக்கொண்டிருக்கவோகூடாது. “ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா? நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப் பாய்ச்சினான். தேவனே விளையச்செய்தார்” (1 கொரி. 3:4,6) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

தேவபிள்ளைகளே, நம்முடைய தாலந்துகள், திறமைகள், ஆவியின் வரங்கள் எல்லாம் கர்த்தர் நமக்கு கிருபையாய் தந்த ஈவுகள். அவைகளை நாம் பயன்படுத்தும்படி கர்த்தருடைய பண்ணையிலே வேலையாட்களாய் இருக்கிறோம். கொஞ்சத்திலே உண்மையுள்ளவர்களாய் இருந்தால் கர்த்தர் நம்மை அநேகத்தின்மேல் அதிகாரியாய் உயர்த்துவார் என்று வேதம் சொல்லுகிறது.

நினைவிற்கு:- “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” (கலா. 6:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.