Appam, Appam - Tamil

ஜூன் 17 – ஆவியானவரின் ஏவுதல்!

“அவன் (சிம்சோன்) சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார் (நியா. 13:25).

இஸ்ரவேல் ஜனங்களை பெலிஸ்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கும்படியான விசேஷ பாத்திரமாக கர்த்தர் சிம்சோனைத் தெரிந்துகொண்டார். சிம்சோன் அந்த அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் எண்ணாமல், அசதியாய் வாழ்ந்துகொண்டிருந்தபோது ஆவியானவர் பேசாமலிராமல் அவனை ஏவத்துவங்கினார்.

கர்த்தருக்காக பராக்கிரமம் செய்யும்படி இன்றைக்கும் நம்மை ஆவியானவர் ஏவிக்கொண்டே இருக்கிறார். ஆவியானவருடைய ஏவுதலை உங்களுடைய வாழ்க்கையிலே அனுபவித்திருக்கிறீர்களா? வேதம் சொல்லுகிறது, “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோம. 8:14).

கர்த்தருடைய ஆவியானவர் என் வாழ்க்கையிலே அதிகமாய்க் கொடுக்கிற ஒன்று, விசுவாசிகளுக்காகவும், ஊழியர்களுக்காகவும் தரும் ஜெப ஏவுதலாகும். சிலருடைய முகத்தை மனக்கண்கள் முன்பாகக் கொண்டுவருவார். சிலருடைய பெயர்களை ஞாபகப்படுத்துவார். ஜெபிக்கும்படி தூண்டிவிடுவார். அந்த ஏவுதலினால் ஜெப பாரமும், ஆத்தும பாரமும் உண்டாகும். அப்பொழுது ஏற்ற வார்த்தைகளைச் சொல்லி ஜெபிக்கும்படியான மன்றாட்டின் ஆவியையும் தந்தருளுவார்.

சில விசுவாசிகள் சபைகளிலே தேவ ஆவியானவருடைய ஏவுதலினால் வல்லமையாய் ஜெபிக்கும்போது, முழு சபையும் ஆவியினாலே நிரப்பப்படுகிறதைப் பார்த்திருக்கிறேன். தேவனுடைய அபிஷேகம் அனைத்து விசுவாசிகளையும் நிரம்பி வழியச்செய்யும்.

அப்படியே சூழ்நிலைக்கு ஏற்ற சரியான பாடல்களைப் பாடும்படியாகவும் ஆவியானவர் ஏவுதல் தருவார். அந்தப் பாடல்கள் நமக்கு மட்டுமல்ல, முழு சபைக்கும் பக்திவிருத்திக்கு ஏதுவானதாக மாறிவிடும்.

அப்படியே, நாம் ஏறெடுக்கும் ஜெபங்களும், பாடும் பாடல்களும், கொடுக்கும் தேவ செய்திகளும் ஆவியானவருடைய ஏவுதலின்படி அமைந்திருக்குமானால், அதிலே நிச்சயமாகவே ஒரு பெரிய ஆத்தும அறுவடை இருக்கும். பெரிய பலனையும் நாம் எதிர்பார்க்கலாம். ஆவியானவரின் ஏவுதலின்படி நடக்க நாம் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு.

எப்பொழுதும் நம்முடைய உள்ளத்தை ஆவியானவரோடு இணைத்து அவர் சித்தம் என்ன, அவர் என்ன சொல்லுகிறார் என்பதை மிகுந்த ஜாக்கிரதையுடன் நாம் கவனிக்கவேண்டும். அதற்கு ஆவிக்குரிய நுண்ணுணர்வு மிகவும் அவசியம். சில வேளைகளில் புதிய ஆத்துமாக்களை சந்திக்கும்படி ஏவுதல் தருவார். மருத்துவமனைக்குச் சென்று வியாதியஸ்தர்களோடு பேசும்படி ஏவுதல் தருவார்.

தேவபிள்ளைகளே, ஆண்டவர் உங்களோடு பேசும்போது உடனடியாக கீழ்ப்படியுங்கள். அவ்வாறு கீழ்ப்படிந்தால் மேன்மேலும் தேவ இரகசியங்களைத் தந்து உங்களை வழிநடத்துவார். கீழ்ப்படியாமலிருந்துவிட்டால் அவர் தொடர்ந்து உங்களை ஏவுவதையும் நிறுத்திவிடுவார்.

நினைவிற்கு:- “எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” (மத். 10:19,20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.