ஜூன் 10 – சொன்னபடியே!
“எவனாகிலும் …. தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்” (மாற். 11:23).
நாம் சொல்லுகிற வார்த்தைகளைக் கர்த்தர் கனப்படுத்துகிறார். நீதிமான் சொன்னபடியே ஆகும் (மாற். 11:23). அவன் செய்கிறது எல்லாம் வாய்க்கும் (சங். 1:3). ‘இயேசுவே கர்த்தர். தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று என் இருதயத்தில் விசுவாசிக்கிறேன்’ என்று முழு இருதயத்தோடு சொன்னால் இரட்சிக்கப்படுவீர்கள் (ரோம. 10:9,10) என்று வேதம் சொல்லுகிறது.
இயேசுவினுடைய தழும்புகளால் குணமானேன் (1 பேது. 2:24) என்றும், இயேசுதாமே என் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு என் நோய்களை சுமந்திருக்கிறார் (மத். 8:17) என்றும், அவரே என் பரிகாரியாகிய கர்த்தர் (யாத். 15:26) என்றும் நாம் சொல்லும்போது சுகத்தையும் ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். அவர் என்னைவிட்டு விலகுவதும் இல்லை, என்னைக் கைவிடுவதும் இல்லை (எபி. 13:5) என்றும், அவருடைய சமுகம் எனக்கு முன்பாகச் செல்லுகிறது (யாத். 33:14) என்றும், அவர் எனக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடுகிறார் (2 நாளா. 14:7) என்றும் சொல்லும்போது நாம் தேவ சமுகத்தையும், அவருடைய பிரசன்னத்தையும் உணரமுடியும்.
நான் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும்குறித்து என் விண்ணப்பங்களை தேவனுக்குத் தெரியப்படுத்துவேன் (பிலி. 4:6) என்று விசுவாசத்துடன் நாம் சொல்லும்போது கவலையிலிருந்து விடுதலை பெறமுடியும். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு (பிலி. 4:13) என்று சொல்லும்போது நாம் தேவபெலனையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் (சங். 23:1) என்றும், என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி என் தேவைகளையெல்லாம் சந்திப்பார் (பிலி. 4:19) என்றும் சொல்லும்போது நாம் குறை இல்லாத நிறைவான வாழ்க்கையைப் பெறமுடியும்.
என்ன சொன்னால் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்? ‘என் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நான் கவனமாயிருக்கும்படி அவருடைய சத்தத்துக்குச் செவிகொடுப்பேன். என் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள சகல ஜனங்களிலும் என்னை மேன்மையாக வைப்பார். நான் பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பேன். வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பேன். என் கர்ப்பத்தின் கனியும், என் நிலத்தின் கனியும், என் மாடுகளின் பெருக்கமும், என் ஆடுகளின் மந்தைகளுமாகிய என் மிருக ஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
எனக்கு விரோதமாய் எழும்பும் என் சத்துருக்களை கர்த்தர் எனக்கு முன்பாக முறியடிக்கும்படி ஒப்புக்கொடுப்பார். ஒரு வழியாய் எனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள். ஏழு வழியாய் எனக்கு முன்பாக ஓடிப்போவார்கள். கர்த்தர் என் களஞ்சியங்களிலும் நான் கையிடும் எல்லா வேலையிலும் எனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார் (உபா. 28:1-8) என்னும் வேத வாக்கியங்களை விசுவாச அறிக்கையாக நீங்கள் சொல்லுவீர்களேயானால் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளுவீர்கள்.
நினைவிற்கு:- “ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று” (கலா. 3:14).