Appam, Appam - Tamil

ஜூன் 03 – மனப்பூர்வமாய்!

“ஜனங்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என் இருதயம் நாடுகிறது (நியா. 5:9).

இஸ்ரவேலின் நியாயாதிபதியாயிருந்த தெபொராளின் உள்ளம் மனப்பூர்வத்தை நாடினது. இஸ்ரவேலின் அதிபதிகளெல்லாம் மனப்பூர்வமாக தங்களைக் கர்த்தருக்காக ஒப்புக்கொடுத்து தெபொராளோடு ஒன்றாய் நின்று யுத்தத்தை செய்ததினால் அவர்கள் ஜெயம்கொண்டார்கள். கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. தெபொராளின் உள்ளம் மகிழ்ந்து கர்த்தரைத் துதிக்க ஆரம்பித்தது.

ஒரு குடும்பத்திலே பிள்ளைகள் மனப்பூர்வமாய் பெற்றோரோடு இணைந்து நிற்கிறார்கள் என்பது எத்தனை பெரிய சந்தோஷம்! மருமக்கள்மாரும், பேரப்பிள்ளைகளும் கூடி இணைந்திருந்தால் அதைப்போல் ஆசீர்வாதமான காரியம் குடும்பத்திலே வேறு ஒன்றுமில்லை. விசேஷமாக, போராட்ட நாட்களிலே துன்பமும், துக்கமும் வீடுகளில் மோதும்போது, வீட்டிலுள்ள எல்லோரும் ஒருமனமாக நிற்பார்களென்றால் அதைப்போன்ற சந்தோஷமான காரியம் ஒன்றுமில்லை. மேலும் அப்போராட்டங்களில் ஜெயத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.

மனப்பூர்வம் என்றால் முழுமனதுடன் (Whole Hearted) என்று அர்த்தம். சிலர் ஏனோதானோவென்று கர்த்தரைப் பின்பற்றுகிறார்கள். சிலர் கடமைக்காகவும், கட்டாயத்திற்காகவும் அவரைப் பின்பற்றுகிறார்கள். சிலர் தேவைகளைப் பெற்றுக்கொள்ளும்படி தங்கள் சுய ஆதாயத்திற்காக பின்பற்றுகிறார்கள். சிலரோ மனப்பூர்வமாய் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து அவரைப் பின்பற்றுகிறார்கள்.

ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டும்படி கர்த்தர் விரும்பினபோது அவர் மோசேயை நோக்கி “மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கை வாங்குவீர்களாக” (யாத். 25:2) என்றார். அதைத்தொடர்ந்து, மனப்பூர்வமுள்ள ஸ்திரீகளும், புருஷர்களும் தங்களுடைய ஆபரணங்களையெல்லாம் காணிக்கையாக உற்சாகமாகக் கொடுத்தார்கள் (யாத். 35:22,29). மனப்பூர்வம் வந்துவிட்டால் ஒருமனப்பாடு வந்துவிடும். ஒருமனப்பாடு வந்துவிட்டால் நிச்சயமாகவே எழுப்புதல் வந்துவிடும்.

ஒரு அலுவலகமோ, நிர்வாகமோ அல்லது ஊழிய ஸ்தாபனமோ ஆசீர்வதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் அதிலிருக்கிற மனப்பூர்வமான ஊழியர்களே. அவர்கள் ஊழியத்திற்காகப் பணியாற்றுவதில்லை. கர்த்தருக்காகப் பணியாற்றுகிறார்கள். ஆகவேதான் அப். பவுல் நமக்கு அறிவுரைகளை வழங்கும்போது, “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோ. 3:24) என்று ஆலோசனை கூறுகிறார்.

அதுபோலவே பிலேமோனுக்கு எழுதும்போது, நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல; மனப்பூர்வமாய் செய்யும் என்று எழுதினார் (பிலே. 1:14). மனப்பூர்வத்தில் கர்த்தர் நிச்சயமாகவே மனம் மகிழ்கிறார்.

மற்றவர்கள் உங்களோடு மனப்பூர்வமாய் நிற்கவேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறது போல, நீங்களும் கர்த்தரோடு மனப்பூர்வமாய் நில்லுங்கள். அவருடைய சுவிசேஷ ஊழியத்திற்கு மனப்பூர்வமாயும், உதாரத்துவமாயும் கொடுங்கள். ஜெபிக்கும்போது சந்தோஷத்துடன் மனப்பூர்வமாய் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து ஜெபியுங்கள். வேத வசனங்களை மனப்பூர்வமாய் தாகத்தோடு வாசியுங்கள். கர்த்தரைத் துதித்துப் பாடுங்கள், ஆராதியுங்கள். அவர் மேலுள்ள அன்பை மனப்பூர்வமாய் வெளிப்படுத்துங்கள்.

நினைவிற்கு:- “உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்” (சங். 110:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.