மார்ச் 18 – குமாரனைத் தந்தார்!
“தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” (ரோமர் 8:32).
நம்முடைய தேவன் சகல நன்மைகளையும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவர். அவர்தான் ஆசீர்வாதத்தின் மூலகாரணர். சகல நன்மைகளுக்கும் ஊற்றாயிருக்கிறார். ஒத்தாசை செய்கிற பர்வதம் அவர்தான். தாழ்விலே நம்மை நினைக்கிறவர் அவர்தான்.
உலக சிருஷ்டிப்பிலே எல்லாவற்றையும் அவர் நமக்கு சம்பூரணமாய்க் கொடுத்தார். அதற்கெல்லாம் மேலாக மாபெரும் ஈவாக கிறிஸ்துவையே நமக்காகக் கொடுத்தார். கிறிஸ்துவுக்குள் நாம் பெறுகிற சம்பூரணமான ஆசீர்வாதங்களை வார்த்தைகளினால் விவரிக்க முடியாது. கிறிஸ்துவில் வாக்குத்தத்தங்களுண்டு, உபதேசங்களுண்டு, தெய்வீக சுகங்களுண்டு, திவ்விய சுபாவங்களுண்டு, மேன்மையுண்டு, மகத்துவமுண்டு, மகிமையுமுண்டு.
எல்லாவற்றுக்கும் மேலாக அவர் சிலுவையிலே தம்மைத்தாமே நமக்காகத் தந்தருளினார். உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவரை நன்றியோடு துதிப்பீர்களா? “கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். போஜனம் பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது ….என்றார் (1கொரி. 11:23-25).
பிதாவாகிய தேவன் தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பாராமல், இயேசுவை நமக்குத் தந்தருளினார். இயேசுகிறிஸ்துவோ தன் ஜீவன் என்றும் பாராமல், தன் மாம்சத்தையும் இரத்தத்தையும் நமக்குத் தந்தருளினார்.
நம் தேவனாகிய கர்த்தர் இத்தனை நன்மைகளைச் செய்வதற்கும், எல்லாவற்றையும் சம்பூரணமாய் உங்களுக்குக் கொடுப்பதற்கும் காரணம் என்ன? அவருடைய அன்பே இதற்கெல்லாம் காரணம். வேதம் சொல்லுகிறது, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான் 3:16).
தேவபிள்ளைகளே, இயேசு என்று அவரது திருப்பெயரைச் சொல்லும்போதே இருதயமெல்லாம் மகிழ்ந்து களிகூருகிறது அல்லவா? ‘என் நாமத்தினால் நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்’ என்று அவர் வாக்களித்திருக்கிறாரே.
சிலுவையிலே அறையுண்ட இயேசுகிறிஸ்து, உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார். இன்றைக்கும் அவர் பிதாவினுடைய வலது பாரிசத்திலே உங்களுக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர் உங்களுக்காக பரிதபிக்கிற பிரதான ஆசாரியன் அல்லவா?
நினைவிற்கு:- “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான். 1:12).