ஜனவரி 30 – பாடுகளின் பூரணம்!
“இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது” (எபி. 2:10).
அநேக உபத்திரவங்களின் வழியாகத்தான் நீங்கள் பூரணமடைந்து, கர்த்தருடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்று வேதம் திட்டமாய்ப் போதிக்கிறது. பரலோகத்தில், பிதாவின் செல்லப்பிள்ளையாயிருந்த இயேசுவானவர் நமக்காக பூமிக்கு இறங்கி வந்தார். இரட்சிப்பின் அதிபதியான கிறிஸ்துவை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது பிதாவுக்கேற்றதாயிருந்தது.
வேதம் சொல்லுகிறது, “இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்” (மத். 16:21).
பேதுரு சீஷர்களுக்குள் முதன்மையானவராகக் கருதப்பட்டாலும், மற்ற சீஷர்களைப் பார்க்கிலும் அவருக்கு அதிகமான தைரியம் இருந்தது. அவர் இயேசுவைத் தனியே அழைத்துக் கொண்டு போய், “ஆண்டவரே இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை” (மத். 16:22) என்று அவரிடம் தைரியத்துடன் தெரிவித்தார்.
அவரோ திரும்பிப் பார்த்து: “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்” (மத். 16:23).
மனுஷன் சுகபோகமான வாழ்க்கையைச் சிந்திக்கிறான். ஆனால் கர்த்தரோ பாடுகளால் பூரணப்படும் வாழ்க்கையைச் சிந்திக்கிறார். மனுஷன் உலகத்தில் உயர்வதைக் குறித்தே சிந்திக்கிறான். கர்த்தரோ உலகத்தைச் சிலுவையில் அறைவதைச் சிந்திக்கிறார். மனுஷன் பேரும், புகழுமடையச் சிந்திக்கிறான். கர்த்தரோ, தன்னை வெறுமையாக்கி ஊற்றிவிட சிந்திக்கிறார்! தேவபிள்ளைகளே, கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலிருக்கட்டும்.
வேதம் சொல்லுகிறது: “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2 தீமோ. 3:12). “அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது” (பிலி. 1:29). இயேசு தமது சீஷர்களுக்கு உல்லாச, சுகபோகமான மார்க்கத்தைப் போதிக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே பாடுகளைச் சகிக்க அவர்களை ஆயத்தம் செய்தார்.
இயேசு சொன்னார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:33). தேவபிள்ளைகளே, உலகத்தை ஜெயித்த கிறிஸ்து உங்கள் ஒவ்வொரு பாடுகளின் பாதையிலும் கூடவே வருகிறார் என்பதை மறந்துபோகாதேயுங்கள். எந்த பாடுகளானாலும், கிறிஸ்து இயேசுவின் அன்பிலிருந்து ஒருபோதும் உங்களைப் பிரித்துவிடாதபடி, பூரணத்தை நோக்கி மகிழ்ச்சியோடு முன்னேறுவீர்களாக!
நினைவிற்கு:- “நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” (2 தீமோ. 2:11,12).