அக்டோபர் 09 – பரிபூரண ஜீவன்!
“நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவா. 10:10).
நம் தேவன் எல்லோருக்கும் ஜீவனையும், சுவாசத்தையும், சகலத்தையும் கொடுக்கிறவர் (அப். 17:25). சுவாசம் இல்லை என்றால் நம்மால் உயிரோடு இருக்கமுடியாது. கர்த்தர் மனுஷனை சிருஷ்டித்தபோது, அவனை மண்ணினாலே உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான் (ஆதி. 2:7).
அந்தோ, ஒருநாள் பாவம் மனிதனுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டது. பாவம் எவ்வளவு கொடியது! அதனுடைய விளைவுகள் எவ்வளவு பயங்கரமானது! பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் சொல்லுகிறது. பாவங்களுக்குக் காரணமான சாத்தான் கொலைபாதகனாக இருக்கிறான். அவன் திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.
ஒரு கணவன், மனைவியானவள் தனக்கு துரோகம் செய்ததை கண்டுபிடித்தபோது, கோபத்தில் தன் மனைவி முகத்தில் பயங்கரமான திராவகத்தை (Acid) எறிந்தான். அவளது முகம் முழுவதுமாய் வெந்துபோனது. அந்த நொடியே, அவள் பார்வையிழந்தவளாய் துடித்தாள். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் அவளை மருத்துவமனையிலே சேர்த்தார்கள். அவள் காப்பாற்றப்பட்டாலும் அவளது முகத்தோற்றமோ விகாரமானதாயும், அருவருப்பானதுமாகிவிட்டது.
பாவம்கூட மனிதனுடைய வாழ்க்கையில் அதைத்தான் செய்தது. தேவ சாயலையும், தேவ மகிமையையும் மனிதன் இழந்தான். தேவனோடுள்ள ஐக்கியத்தை இழந்தான். அப்பா பிதாவே, என்று அழைக்கும் உறவு முறையை இழந்தான். கர்த்தர் கொடுத்த அதிகாரத்தையும், ஆளுகையையும் இழந்தான். தெய்வீக குணாதிசயத்தையும், சுபாவத்தையும் இழந்தான். பாவியாகிய மனிதனை மீட்கவே இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார்.
மரணத்தோடு போராடுகிற ஒரு வியாதியஸ்தனை மருத்துவமனையிலே சேர்க்கும்பொழுது மருத்துவர்களின் முதலாவது நோக்கம் அவனை எப்படியாவது மரணத்திலிருந்து காப்பாற்றவேண்டும் என்பதே. பின்பு அவன் நல்ல சுகமடைந்து நல்ல ஆரோக்கியத்தைப் பெற ஆவன செய்வார்கள். முதலில் அவனுக்கு விடுதலை வேண்டும். அடுத்தது, அவன் பெலமுள்ளவனாய் மாறவேண்டும்.
இயேசுகிறிஸ்து தன்னுடைய ஜீவனைக் கொடுத்து அக்கிரமத்திலும், பாவத்திலும் மரித்த நிலையிலிருந்த நம்மை உயிர்ப்பித்தார். அதன் பின்பு நம்மையும் அவரைப்போல மாற்றி பூரணத்திற்குள் வழிநடத்தச் சித்தமானார். அதுதான் ‘ஜீவன் உண்டாயிருக்கவும், பரிபூரணப்படவும்’ என்பதின் அர்த்தம்.
நீங்கள் நித்திய ஜீவனை மட்டுமல்ல, பரிபூரண ஜீவனையும் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அவருடைய வருகையிலே கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மறுரூபப்படுவீர்கள். அதைத்தான் நாம் விடுதலையின் சுவிசேஷம் என்றும், மகிமையின் சுவிசேஷம் என்றும் அழைக்கிறோம். எகிப்திலிருந்து விடுதலையாவது முதல் படி, பாலும் தேனும் ஓடுகிற கானானை சுதந்தரிப்பது அடுத்த படி.
தேவபிள்ளைகளே, நீங்கள் பெலத்தின்மேல் பெலனடைந்து, மகிமையின்மேல் மகிமையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
நினைவிற்கு:- “எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்” (கொலோ. 1:28).