ஜனவரி 31 – கிறிஸ்துவின் பூரணம்!
“கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்” (எபே. 4:11).
கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியை அடையும்போது நீங்கள் பூரண புருஷராகவே மாறிவிடுவீர்கள். அதற்கு முன்மாதிரி, அளவுகோல் எல்லாமே நம் அருமை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதான். வேதம் சொல்லுகிறது: “இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்” (லூக். 2:52).
முதலாவது, அவர் ஞானத்தில் விருத்தியடைந்தார். கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம் என்று வேதம் சொல்லுகிறது, யோபு சொல்லுகிறார், “இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி” (யோபு 28:28). சிறு காரியத்தைச் செய்ய வேண்டுமென்றாலும் அதற்கு உங்களுக்கு ஞானம் தேவை. வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்” (நீதி. 2:6, 7). கிறிஸ்து ஞானத்திலே வளர்ந்ததுபோல நீங்களும் தேவ ஞானத்தில் வளர வேண்டும்.
இரண்டாவது, கிறிஸ்து வளர்த்தியிலே விருத்தியடைந்தார். நீங்கள் ஒலிவ மரக்கன்றுகளைப்போல வளர வேண்டும் என்பது அவருடைய ஆசை. உங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சி அவரை மனமகிழ்ச்சியடையச் செய்கிறது. நீங்கள் ஆவியின் வரங்களைப் பெறும்போதும், ஜெப ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போதும், சாட்சி பகரும்போதும், உங்களது ஆவிக்குரிய வளர்ச்சியைப் பார்த்து கர்த்தர் மிகவும் சந்தோஷப்படுகிறார்.
மூன்றாவது, இயேசுகிறிஸ்து கிருபையிலே விருத்தியடைந்தார். அதுபோல நீங்களும் தேவனுக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும் தாழ்மையோடு நடந்து கொள்ளும்போது, கர்த்தர் உங்களைக் கிருபையிலே பூரணப்படும்படி வழிநடத்துகிறார். “நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று” (1 தீமோ. 1:14) என்பதே அப். பவுலின் சாட்சியாயிருந்தது.
நான்காவது, கிறிஸ்து மனுஷர் தயவிலே அதிகமதிகமாய் விருத்தியடைந்தார். அநேகர், தேவபிள்ளைகளுக்கு மனுஷர் தயவு எதற்கு என்று கேட்கிறார்கள். கர்ப்பம் தரித்து தன்னை சுமக்க மரியாளின் தயவு கிறிஸ்துவுக்குத் தேவைப்பட்டது. அவரோடு இணைந்து ஊழியம் செய்ய சீஷர்களின் தயவு தேவையாயிருந்தது. அவர் கடற்கரையில் நின்று பிரசங்கிக்க ஒரு படகு தேவையாயிருந்தது. ஆகவே நீங்கள் மனுஷர் தயவை அற்பமாய் எண்ணக் கூடாது. மனுஷருடைய கண்களில் தயவு கிடைக்கும்படி உதவி செய்ய கர்த்தர் வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியிலே நீங்கள் பூரணப் புருஷராகவேண்டுமென்றால், கிறிஸ்துவைப்போல ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைய வேண்டும்.
நினைவிற்கு:- “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால்… தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” (யாக். 1:5).