ஜனவரி 03 – புதிய பாதை!
“தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்” (யாக். 5:20).
இந்த வசனத்திலே கர்த்தர் தப்பிப்போன ஒரு மார்க்கத்தைக் குறித்து சொல்லுகிறார். தப்பிப்போன மார்க்கத்தில் செல்லுகிறவர்கள், இறுதியில் பாதாளத்தில்தான் பங்கடைவார்கள். நீங்கள் புதிய இருதயத்தோடும், புதிய ஆவியோடும், புதிய பாடலோடும், கிறிஸ்துவண்டை வந்து புதிய சுவிசேஷத்தை அனுபவித்தால் மட்டும் போதாது. தப்பிப்போன மார்க்கத்தில் உள்ளவர்களைக் கர்த்தரண்டை கொண்டு வந்து, அவர்களுடைய வாழ்க்கையைப் புதிதாக்க முயற்சிக்கவும் வேண்டும். அவர்களுக்கும் இந்தப் புதிய சுவிசேஷத்தை எடுத்துக் கூறவேண்டும்.
தாவீதினுடைய வாழ்க்கையைப் பாருங்கள். அவர் சுய இச்சையினால் பீடிக்கப்பட்டு, தான் என்ன செய்கிறோம் என்கிற உணர்வு இல்லாமல், வழிதப்பி நடந்தார். இன்னொருவனின் மனைவியை இச்சித்து, அவளை எடுத்துக்கொள்ளும்படி அவளுடைய கணவனைக் கொலை செய்தார். விபச்சாரத்தில் விழுந்துவிட்டார். அப்படியே தன் வாழ்க்கையைத் தொடர்ந்திருந்தால் பரிதாபமான முடிவைத்தான் அவர் பெற்றிருந்திருப்பார். அவரை அந்த வழியிலே அப்படியே விட்டுவிட நாத்தான் தீர்க்கதரிசிக்குப் பிரியமில்லை. தாவீது தனித்திருக்கும்போது வந்து, உவமையான ஒரு கதையைக் கூறி மிகவும் சாதுரியமாக தாவீதின் பாவத்தைக் கண்டித்து உணர்த்தினார்.
தாவீது கண்ணீரோடு பாடிய 51-ம் சங்கீதம், இன்றைக்கும் வழி தப்பிப்போன அநேகம்பேர் மனங்கசந்து அழுது, நருங்குண்ட நொறுங்குண்ட இருதயத்தோடு கர்த்தரண்டை திரும்பி வருவதற்கு வழிகாட்டுகிற ஒன்றாக இருந்து வருகிறது. மீண்டும் கர்த்தரிடத்தில் திரும்பினால் நிச்சயமாகவே அவரிடத்தில் இரக்கம் உண்டு என்பதை நாம் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்துவந்த ஒரு இளம் பெண், தன் கணவருக்கு துரோகம் செய்து பாவத்தில் விழுந்தாள். கணவருக்கு இது தெரியவந்தவுடன், தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தாள். அந்த சூழ்நிலையிலும், கர்த்தர் மனமிரங்கி, ஒரு தேவ ஊழியரை அனுப்பி, அவளுடன் அன்புடன் பேசச் செய்தார். அந்த பெண் மனந்திரும்பி கண்ணீருடன் தன் பாவங்களை அறிக்கைசெய்து கர்த்தரண்டை திரும்பினாள். அவளது கணவனது இருதயமும் உருகிற்று. அவளுடைய குடும்ப வாழ்க்கை அன்றுமுதல் சந்தோஷமானதாயும், சமாதானமானதாயும் மாறினது.
தேவபிள்ளைகளே, எல்லாச் சூழ்நிலைகளிலும் கர்த்தர் உங்களை நேசிக்கிறவர். உண்மையான மனஸ்தாபத்தோடும், கண்ணீரோடும் கர்த்தரண்டை திரும்பி வருபவர்களுக்கு அவர் ஒரு புது வாழ்க்கையைக் கட்டளையிட ஆவலுள்ளவராய்இருக்கிறார். கண்ணீரோடு அவரண்டை திரும்பும்போது புதிய கிருபையோடும், மனதுருக்கத்தோடும் உங்களுக்கு மனமிரங்குவார். கண்ணீரோடு தம்மண்டை திரும்புகிறவர்களை அவர் கரம் பற்றி புதிய பாதையில் நடத்திச் செல்வார்.
நினைவிற்கு:- “இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்” (ரோமர் 6:22).