AppamAppam - Tamil

ஆகஸ்ட் 23 – விலங்குகளிலிருந்து விடுதலை!

“இப்போதும், இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப் போட்டேன்” (எரே. 40:4).

இன்று தேவ ஜனங்களின் கரங்களிலே காணக்கூடாத பலவிதமான விலங்குகள் இருக்கின்றன. சிலருடைய கரங்களில் கடன் என்கிற விலங்கு போடப்பட்டிருக்கிறது. ஊழியங்களுக்கு அள்ளிக் கொடுக்க விரும்பியும் கைகளில் விலங்குகள் இருப்பதால் அவர்களால் கொடுக்க முடியவில்லை. சிலருடைய கைகளிலே லஞ்சம் என்கிற விலங்கு இருக்கிறது. உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ விடாமல் லஞ்சம் அவர்களைத் தடுக்கிறது. சிலருடைய கரங்களில் சாபங்கள் என்கிற விலங்குகள் இருக்கின்றன. அதனால் கையின் பிரயாசங்கள் வாய்ப்பதில்லை. எதைச் செய்தாலும் தோல்வியே.

ஆனால் கர்த்தர் இன்றைக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறார். இருப்பு தாழ்ப்பாள்களையும், வெண்கலக் கதவுகளையும் உடைத்துப் போட வல்லமையுள்ள தேவன், ‘இதோ உன் கைகளில் இடப்பட்ட விலங்குகளை இன்றைக்கு நீக்கிப் போட்டேன்’ என்று சொல்லி விடுதலையைக் கூறுகிறார்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய கையில் இருக்கிற விலங்கு எதுவென்று உங்களுக்குத்தான் தெரியும். அதை கர்த்தரிடத்தில் மனம் திறந்து சொல்லுங்கள். அந்த விலங்குகள் முறிக்கப்பட, வாரத்தில் ஒரு நாளாகிலும் உபவாசமிருந்து ஜெபியுங்கள். உங்களுடைய பின்மாற்ற விலங்கானாலும் சரி, பலவீனம் என்னும் விலங்கானாலும் சரி, பிரச்சனை என்னும் விலங்கானாலும் சரி, கர்த்தர் அதை உடைத்துப் போட வல்லமையுள்ளவர்.

சாத்தான் இன்றைக்கு அநேகம் பேரைக் கட்டிப் போட்டிருக்கிறான். இதனால், பலரால் ஊழியம் செய்யவோ, பரிசுத்தமாக வாழவோ முடிவதில்லை. கர்த்தருக்குக் கொடுக்க விரும்பியும் கொடுக்க முடிவதில்லை.

இயேசு சொன்னார் “இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா?” (லூக் 13:16). இவள் ஆபிரகாமின் குமாரத்திதான். தெரிந்துக்கொள்ளப்பட்ட சந்ததிதான். நல்ல விசுவாசிதான். வாக்குத்தத்தங்களுக்கு சுதந்தரவாளிதான். ஆனாலும், அவள் சாத்தான் தன்னைக் கட்டுவதற்கு இடம் கொடுத்து விட்டாள். இயேசுகிறிஸ்து அதைக் கண்டு கட்டுகளை அறுத்துப் போட்டார். அவள் விடுதலை பெற்றாள். வேதம் சொல்லுகிறது, “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவான் 8:36).

விடுதலை செய்ய வல்லமையுள்ளவர் உங்களுடைய அருகில்தான் இருக்கிறார். இன்றைக்கு அவரைப் பார்த்து ஜெபிக்க ஆரம்பித்து விடுங்கள். ‘ஆண்டவரே, என் வியாதியிலிருந்து, என் எரிச்சலிலிருந்து, கசப்பிலிருந்து, பின்மாற்றத்திலிருந்து, ஜெபம் பண்ணமுடியாத நிலைமையிலிருந்து விடுதலை வேண்டும்’ என்று ஜெபியுங்கள். நிச்சயமாகவே அவர் விடுவிப்பார். “ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய்” (சங். 50:15) என்று இயேசு சொல்லி இருக்கிறாரே.

நினைவிற்கு:- “கர்த்தரே ஆவியானவர், கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” (2 கொரி. 3:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.