AppamAppam - Tamil

ஆகஸ்ட் 15 – தெய்வீக சமாதானம்!

“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்”(பிலி.4:6,7).

இயேசு கிறிஸ்து, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை உங்களுக்கு அருளுகிறவர். தம்முடைய தெய்வீக சமாதானத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறவர். இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்ட நாமங்களில் அற்புதமானது ‘சமாதான பிரபு’ என்பதாகும். அவர் இந்த பூமியிலிருந்த நாட்களில் எங்கெல்லாம் சென்றாரோ, யாரையெல்லாம் சந்தித்தாரோ, அத்தனை பேருக்கும் சமாதானத்தைக் கட்டளையிட்டார்.

வேதத்திலே பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீயைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. அவளுக்கு அது ஒரு தீராத வியாதியாயிருந்தது. அந்த வியாதியினிமித்தம் அவள் பன்னிரண்டு வருடமாய் வேதனைப்பட்டாள். அந்த வியாதியைக் குணமாக்க ஒரு வைத்தியராலும் முடியவில்லை. ஆகவே அவள் தன் வாழ்க்கையிலே சமாதானத்தை இழந்துபோயிருந்தாள்.

ஆனால், ஒரு நாள் அவள் இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு, ஜனக்கூட்டத்தின் மத்தியிலே போய் இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள். அவள் இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டவுடனே, கர்த்தருடைய வல்லமை பலமாய் அவள் மீது இறங்கினபடியால், அவள் சுகத்தைப் பெற்றுக்கொண்டாள். வேதம் சொல்லுகிறது, “அவர் அவளைப் பார்த்து மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி சுகமாயிரு என்றார்” (மாற். 5:34).

ஒரு முறை ஒரு பாவியான ஸ்திரீ இயேசுகிறிஸ்துவின் பாதத்தில் ஓடி வந்து விழுந்தாள். அவள் கதறி அழுது, தன்னுடைய கண்ணீரால் இயேசுவின் பாதத்தைக் கழுவினாள். ஏனென்றால், அவளுடைய பாவங்களும், அக்கிரமங்களும் அவ்வளவு பெரிதாயிருந்தன. அவளுடைய வாழ்க்கையிலே சமாதானமேயில்லை. இயேசு அவளுடைய சமாதானமற்ற நிலைமையை கண்டார். “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்” (லூக். 7:50).

இயேசு கிறிஸ்து சிலுவையிலே மரித்தபின்பு, சீஷர்களெல்லாரும் மிகவும் பயந்துபோயிருந்தார்கள். யூதர்கள் தங்களையும் உபத்திரவப்படுத்துவார்களோ என்று பயந்தார்கள். அவர்கள் உள்ளத்தில் சமாதானமில்லை. சோர்ந்துபோய் காணப்பட்டார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு தரிசனமாகி, அவர்கள் நடுவிலே நின்று, “உங்களுக்கு சமாதானம்” என்றார். (லூக். 24:36).

தேவபிள்ளைகளே, ஒருவேளை நீங்கள்கூட உங்கள் கஷ்டங்களைக் குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். நீங்கள் எல்லாவற்றையும் கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கும்போது, அவர் எல்லாவற்றுக்கும் மேலான தேவ சமாதானத்தினால் உங்களை நிரப்புவார்.

நினைவிற்கு:- “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.